எடப்பாடி-ஓ.பன்னீர்செல்வம் நேரடி மோதல் எதிரொலி: அதிமுக செயற்குழுவில் பலத்தை காட்ட போட்டா போட்டி

* மூத்த அமைச்சர்கள் ரகசிய ஆலோசனை

* ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க திட்டம்

சென்னை: அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரடியாக மோதிக் கொண்டனர். கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசியதால் எடப்பாடி அணியினர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். வருகிற 28ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் தங்கள் பலத்தை காட்ட இரு அணியினரும் போட்டி போட்டு ஆதரவாளர்களை திரட்டும்  போட்டியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் மாவட்ட அளவில்தான் கோஷ்டி மோதல் இருந்தது. ஜெயலலிதா, 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அதிமுகவில் தொடர்ந்து கோஷ்டி பூசல் என்பது கிளை கழகத்தில் இருந்து உயர்நிலை குழுவரை நிலவி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா முயற்சி செய்தார். இருவரையும் ஓரங்கட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் 2017ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். ஆனாலும், கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி ஆதரவாளர்களின் கையே ஓங்கி உள்ளது. இன்னும் 7 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யாரை அறிவிக்கலாம் என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், அதிமுக அவசர உயர்நிலை ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் அமர்ந்திருந்தனர். எதிரே அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் அமர்ந்திருந்தனர். கே.பி.முனுசாமி வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “நான் இப்போது மகிழ்ச்சிகரமாக இல்லை. துணை முதல்வராக இருந்தாலும், மகிழ்ச்சியாக இல்லை. கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக என்னுடைய பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். என்னுடன் மேலும் 10 அமைச்சர்கள் பதவி விலகுங்கள். கட்சியைப் பணியை செய்வோம் என்றேன். யாரும் முன் வரவில்லை. நான் வாரம் இருமுறை கட்சி அலுவலகம் வருவேன். கட்சியினருடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளேன்.

2017ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில், கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. கட்சியைப் பொறுத்தவரை ெஜயலலிதாதான் நிரந்தர பொதுச் செயலாளர். இதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. எங்களுக்கு வழிகாட்டத்தான் 11 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. நான் 5 பேர் கொண்ட பட்டியலை (கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், பொன்னையன், செம்மலை) கொடுத்து விட்டேன். ஆனால் முதல்வர் தரப்பில் இன்னும் 6 பேர் பட்டியலை கொடுக்கவில்லை. இதனால்தான் வழிகாட்டு குழு அமைக்கப்படவில்லை. இந்த குழு அமைக்கப்பட்டால், கட்சியின் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து போகும்” என்றார்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்படவில்லை. எனது ஆதரவாளர்கள் கட்சியில் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் அதில் 6 பேரை மட்டும் எப்படி தனியாக தேர்வு செய்ய முடியும். ஒருத்தருக்கு பதவி கொடுத்து விட்டு மற்றவர்களை ஒதுக்க முடியாது. இதனால்தான் பட்டியலை கொடுக்கவில்லை. இந்த குழு அமைப்பது சாத்தியமில்லை’’ என்றார். இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘‘பொதுக்குழுதான் அனைத்து அதிகாரம் கொண்டது. பொதுக்குழுதான் 11 பேர் கொண்ட குழுவை அமைப்பது என்று முடிவு செய்தது. அதை நாம் எப்படி தடுக்க முடியும். வேண்டாம் என்று சொல்ல முடியும்’’ என்றார். அமைச்சர் தங்கமணி பேசும்போது, ‘‘குழுவை நியமிப்பது இப்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை என்று எடப்பாடி கூறிவிட்டார்.

இதனால் அதை நாம் ஒதுக்கிவிட்டு, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும்’’ என்றார். கே.பி.முனுசாமி, ‘‘கட்சிக்கு பொதுச்செயலாளராக ஓபிஎஸ்சையும் தல்வர் வேட்பாளராக எடப்பாடியையும் அறிவிக்கலாம்’’ என்றார். கே.பி.முனுசாமியின் கருத்துக்கு வைத்திலிங்கமும் ஆதரவு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய ஜெ.சி.டி.பிரபாகரன், ‘‘ ஓ.பன்னீர்செல்வம், தான் மகிழ்ச்சியாக இல்லை என்றார். அது உண்மைதான். சசிகலாவை எதிர்த்துத்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். அதையேதான் நீங்களும் இப்போது செய்துள்ளீர்கள். சசிலகாவை பற்றி தெரிந்து கொண்டு, சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று கூறித்தான் அவரை ஒதுக்கி வைத்தீர்கள். இதனால் ஒரே கொள்கையுடைய நாம் ஒன்று சேர்ந்தோம்.

ஆனால் கட்சியில் தர்மயுத்தம் நடத்தியவர்களை 3ம் தர குடிமக்களாக பார்க்கிறீர்கள். ஒதுக்கி வைக்கிறீர்கள். கட்சியின் முக்கிய பதவிகளுக்கு உங்களுடைய (எடப்பாடி) ஆட்களைத்தான் போடுகிறீர்கள். ஓபிஎஸ் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறார். சின்னத்தை முடக்கக் கூடாது என்பற்காகத்தான் தன்னை தாழ்த்திக் கொண்டு கட்சி ஒன்றிணைய சம்மதித்தார். ஆனால் அவரது தகுதியை குறைத்து நடத்துகிறீர்கள். அதையும் அவர் தாங்கிக் கொள்கிறார். ஜெயலலிதாவால் 3 முறை முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ்தான். அதனால்தான் தொண்டர்கள் இன்னமும் அவரை ஆதரிக்கிறார்கள்’’ என்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘நாங்கள் யாரையும் ஒதுக்கி வைக்கவில்லை. 3ம் தரமாக நடத்தவில்லை. தகுதிக்கு தகுந்தாரற்போல பதவி வழங்கப்படுகிறது. வேறுபாடு பார்க்கவில்லை’’ என்று மறுத்தார்.

மனோஜ் பாண்டியனும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசினார். `கட்சி தொண்டர்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். அவரை வருத்தமடையச் செய்யக் கூடாது. கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் சொன்னபடி, பொதுக்குழுவில் எடுத்த முடிவை அமல்படுத்த வேண்டும்’ என்றார். மொத்தத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி தவிர மற்றவர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசினர். இதனால் கூட்டத்தில் இறுக்கமான நிலை நிலவியது. எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அமைதியாக இருந்து விட்டனர். இதனால் அதிமுக செயற்குழு வருகிற 28ம் தேதி கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு, நேற்று முன்தினம் இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட 2 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினார்கள். அதே நேரம், மூத்த அமைச்சர்கள் சிலரும் நேற்று ரகசிய இடத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அதனால் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்க எடப்பாடி தரப்பினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதை முறியடிக்க ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். செயற்குழுவில் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களை இழுக்கும் பணியில் இரு அணியினரும் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதனால் அதிமுகவில் மேலும் பிளவு ஏற்படும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இந்த நிலையில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவில் இன்னும் சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறவும் வாய்ப்புள்ளது.

Related Stories: