சுற்றுச்சூழல் பாதிப்பதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி; பசுமைத் தொழில் பிரிவில் இருந்து கோழி பண்ணையை நீக்க பரிந்துரை: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 3 மாதம் கெடு

புதுடெல்லி: கோழிப் பண்ணைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதால், அதை ‘பசுமை தொழில்’ பிரிவில் இருந்து 3 மாதங்களில் நீக்கும்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடுமையாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கோழி வளர்ப்பு மிகப்பெரிய தொழிலாக உள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இத்தொழிலில் முன்னணி நிறுவனங்கள் முதல் சாதாரண விவசாயிகள் வரை அனைவரும் ஈடுபடுகின்றனர். கோழிப் பண்ணைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற முந்தைய முடிவுகளால், இத்தொழில் ‘பசுமை தொழில்’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விலங்குகள் ஆர்வலர் கவுரி மவுலேகி பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ‘கோழிப்பண்ணைகளால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. பண்ணையில் இருந்து வெளியாகும் கழிவுகள் அறிவியல் ரீதியாக அழிக்கப்படுவதில்லை. இதனால், அருகாமையில் உள்ள பகுதிகளின் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மக்களுக்கு சுகாதார பிரச்னைகள் ஏற்படுகின்றன. கோழி களுக்கு கொடுக்கப்படும்  நோய் எதிர்ப்பு மருந்துகளால் அதன் இறைச்சி, முட்டையை உண்பவர்களுக்கு சுகாதார கேடு விளைகிறது. மேலும், நீர், காற்று மற்றும் நிலங்களும் பாசுபடுகின்றன. எனவே, இத்தொழிலுக்கு பசுமைத் தொழில் பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதை ரத்து செய்ய வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைமை நீதிபதி ஏ.கே. கோயல், ``கோழிப் பண்ணைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள ‘பசுமை தொழில்’ பிரிவு சலுகையை ரத்து செய்வது பற்றி ஆராய்ந்து, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூன்று மாதங்களில் தனது உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதுவரை, காற்று, நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் சுற்றுச் சூழல் விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அதிகாரிகளுக்கும் உள்ளது. உரம், குப்பை, கழிவு நீர் போன்றவற்றை பண்ணைகள் மோசமாக நிர்வகிப்பது அருகில் வசிக்கும் மக்களை பெரிதும் பாதிக்கிறது.

பண்ணையில் இருந்து வெளியேறும் திடக்கழிவு,  இறந்த கோழிகளால் துர்நாற்றம் வீசுகிறது. இவை அழுகி ஈக்கள், நாய்கள் மற்றும் பிற பூச்சி வகைகளை ஈர்க்கிறது. இதனால், அப்பகுதியினர் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மேலும், இவை நச்சு வாயுக்கள், அமிலங்களை உற்பத்தி செய்கிறது. இதனால் கோழி பண்ணைகள் தீவிர மாசுபாட்டை உற்பத்தி செய்ய காரணமாக இருக்கின்றன,’’ என்று கூறினார்.

* கோழிக் கழிவுகளில் இருந்து உருவாகும் உரம், குப்பை, கழிவு நீர் போன்றவற்றை பண்ணைகள் மோசமாக நிர்வகிப்பது, அருகில் வசிக்கும் மக்களின் சுகாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது.

* பண்ணையில் இருந்து வெளியேறும் திடக்கழிவு,  இறந்த கோழிகளால் துர்நாற்றம் வீசுகிறது.

* இவை அழுகி ஈக்கள், நாய்கள் மற்றும் பிற பூச்சி வகைகளை ஈர்க்கிறது.

* நச்சு வாயுக்கள், அமிலங்களை உற்பத்தி செய்து சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

Related Stories: