×

மாநிலங்களின் உரிமையில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்படுவதா?... மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆவேச குற்றச்சாட்டு

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டங்களை மத்திய அரசு மீறி செயல்படுவதாகவும், மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாகவும்  மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மாநிலங்களவையில் நேற்று, ‘தொற்றுநோய் திருத்த மசோதா- 2020’ குறித்த விவாதம் நடந்தது. இதில், மத்திய அரசை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர். மத்திய அரசானது அரசியலமைப்பு சட்டங்களை மீறுகிறது, மாநிலங்களின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது, நோய் தொற்று நெருக்கடியின்போது தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த தவறிவிட்டது, புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை காப்பற்ற தவறி விட்டது என குற்றம்சாட்டினார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் பேசுகையில், ‘‘மாநிலங்கள் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடுகிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உங்களை நிராகரித்ததை நினைவில் கொள்ளுங்கள்.  நீங்கள் அரசியலமைப்பு சட்டங்களை மீற முடியாது. மசோதாவில் மோசமான விதிகள் உள்ளன. முடிவுகளை எடுப்பதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். மத்திய அரசின் விருப்பத்தை மாநிலங்கள் மீது திணிக்க முடியாது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது. மத்திய அரசானது திருத்தங்கள் ஆட்சியை நடத்தி வருகின்றது,” என்றார்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்பி கே.கேசவ ராவ் பேசுகையில், ‘‘மாநிலங்களின் விவகாரங்களில் தலையிடுவதற்கு முன் அவற்றுடன் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்,” என்றார். சமாஜ்வாடி எம்பி ராம்கோபால் யாதவ் பேசுகையில், ‘‘பிபிஇ கருவிகள், முகக்கவசங்கள், தெர்மல் ஸ்கேனர்கள், வென்டிலேட்டர்கள், சானிடைசர்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விதிகள் தேவை. குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடியவர் கொரோனாவால் உயிரிழந்தால் அவருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும் அந்த குடும்பத்தினரை பாதுகாப்பதற்கான நடவடிக்கை தேவை,’’ என வலியுறுத்தினார்.

திமுக உறுப்பினர் சண்முகம் பேசுகையில், ‘‘புலம் பெயர் தொழிலாளர்களை நகரங்களுக்கு அழைத்து வந்து அவர்கள் இறப்பதற்கு காரணமான ஒப்பந்ததாரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? முன்னறிவிப்பு இன்றி ஊரடங்கு நடவடிக்கை மத்திய அரசு கொண்டு வந்து விட்டது,’’ என்றார். மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் இவ்வாறு அடுக்கடுக்காக குற்றம் சாட்டி பேசியதால், அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Tags : government ,states , Is the central government interfering in the rights of the states and violating the Constitution? ... Opposition parties in the state legislature accuse
× RELATED சென்னையில் தடையை மீறி செயல்பட்டு...