தங்க கடத்தல் ராணி சொப்னாவுடன் தொடர்பு: கேரள அமைச்சர் ஜலீல் மீதான பிடி இறுகுகிறது

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள சொப்னாவுடன் தொடர்பு வைத்திருந்த கேரள அமைச்சர் ஜலீலுக்கு மேலும் சிக்கல் அதிகரித்து வருகிறது. தங்கம்  கடத்தல் வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 10ம் தேதி சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோரை  பெங்களூருவில் என்ஐஏ கைது செய்தது. 12 நாட்கள் அவர்களை என்ஐஏ  தொடர்ந்து காவலில் வைத்து விசாரித்தது. மேலும்,  கேரள உயர்க்கல்வித் துறை அமைச்சர் ஜலீலுக்கும் சொப்னாவுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிந்தது.  இதையடுத்து, ஜலீலிடம் மத்திய அமலாக்கத்துறை, என்ஐஏ விசாரணை  நடத்தியது. அப்போது தனக்கு சொப்னாவை அமீரக தூதரக உயரதிகாரி ஒருவர்தான் அறிமுகம் செய்து வைத்தாகவும்,  தனிப்பட்ட முறையில் அவருடன் தொடர்பு  கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

சொப்னா கும்பலிடம் இருந்து  கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்-டாப்கள், ஹார்டு டிஸ்க்குகள் உட்பட  டிஜிட்டல் ஆவணங்கள் அனைத்தும் பரிசோதித்து, அவற்றில் இருந்த விபரங்கள்  சேகரிக்கப்பட்டு விட்டன. இதுபோல், கைது செய்யப்பட்டவர்களிடம்  இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் பல விபரங்கள் அழிக்கப்பட்டு இருந்தன.. ஆனால்,  அந்த தகவல்களும் மீட்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையின்போது  சொப்னா சொல்லாமல் மறைத்த பல விபரங்களும் அவற்றில் உள்ளன. வரும் 22ம் தேதி  சொப்னாவை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, இது பற்றி விசாரணை நடத்த என்ஐஏ தீர்மானித்துள்ளது. அப்போது பல  முக்கிய தகவல்கள் கிடைக்கும் என கருதுகிறது. ஜலீலுக்கு எதிராக சொப்னா ஏதாவது புதிய வாக்குமூலம் அளித்தால், ஜலீலுக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

ஆடியோவில் இருப்பது ஜலீலின் குரல் தானா?

கடந்த ஜூன் மாதம் சொப்னாவின் செல்போனில் ஒரு ஆடியோ மெசேஜ் வந்துள்ளது. அது,  அமைச்சர் ஜலீல் குரல் போல் உள்ளதாக என்ஐஏ கருதுகிறது. எனவே, அந்த ஆடியோ  எங்கிருந்து வந்தது என கண்டறியும் முயற்சியிலும், அது ஜலீலின் குரல்தானா  என்பதை உறுதி செய்யவும் என்ஐஏ முயற்சி செய்து வருகிறது.

சிவசங்கரிடம் மீண்டும் விசாரணை

கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரும், சொப்னாவுடன் ஏற்பட்ட தொடர்பால் தற்போது சஸ்பெண்டாகி இருக்கிறார். இவரிடம் என்ஐஏ ஏற்கனவே விசாரணை நடத்தி சில ஆதாரங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், என்ஐஏ.வுக்கு புதிதாக கிடைத்த டிஜிட்டல் ஆவணங்களில் இவர் பற்றிய பல தகவல்களும் உள்ளன. எனவே, அவரிடம் என்ஐஏ மீண்டும்  விசாரிக்கும் என கருதப்படுகிறது.

Related Stories: