உரத்த குரலில் பொய்களைப் பேசி பரப்பிட நினைக்கும் அதிமுக அரசின் கபடவேடமும் நாடகமும் அதிக காலம் நீடிக்காது: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: “ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, உரத்த குரலில் பொய்களைப் பேசி, பரப்பிட நினைக்கும் அதிமுக அரசின் கபடவேடமும், கண்மூடித்தனமான நாடகமும், அதிகக் காலம் நீடிக்காது” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை-கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுகவின் மீது, இத்தனை வன்மத்துடன் முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறாரே. நீட் தேர்வு நடப்பதற்கும் மாணவமணிகளின் உயிர்ப்பலிகளுக்கும் திமுக மீது பழி போடுகிறாரே. அதற்கு திமுக எந்தப் பதிலும் சொல்லவில்லையே என்று பொதுமக்கள் கூட நினைக்கக்கூடிய கட்டாயத்தைத் திட்டமிட்டுத் திணிக்கிறது, ஊழல் மலிந்த உதவாக்கரை அதிமுக அரசு.

‘நீட்’ தேர்வு ஏற்படுத்தும் அச்சத்தால், மாணவமணிகளின் உயிர் பறிபோவது பற்றிக் கேட்டால், திமுக தான் காரணம் என்கிறார் மனசாட்சி என்பதே  இல்லாத முதல்வர். நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, சட்ட அங்கீகாரம் பெற்ற மாநிலத்தில், நீட் தேர்வை நுழையச் செய்தது பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்து மறைமுக ஆதரவு அளித்ததாலும், அதிமுக அமைச்சர் தனது டெல்லி எஜமானர்களின் உத்தரவுப்படி கையெழுத்து இட்டதாலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வு எளிதாக நுழைந்தது. இவை அனைத்தையும் மறைத்துவிட்டு, சட்டமன்றப் பாதுகாப்பைப் பயன்படுத்தி, திமுக மீது பழிபோட்டுத் தப்பிக்கலாம் எனச் சட்டப்பேரவையில் ஆவேசம் காட்டுகிறார் முதல்வர் பழனிசாமி.

இதுபோன்று, ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வருபவர்கள் எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சி தான் காரணம் என்று சொல்வது,  அவர்களின் அலட்சியத்தையும் அக்கறையற்ற தன்மையையுமே காட்டுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்து, அதற்காகத் தனக்குத்தானே ஏற்பாடு செய்து கொண்ட விழாவில், ‘காவிரி காப்பாளர்’ என்ற பட்டத்தையும் வாங்கிக் கொண்ட முதல்வர் பழனிசாமியின் ஆட்சியில் தான். திருவாரூர் மாவட்டம் இருள் நீக்கி உள்ளிட்ட 8 இடங்களில், ஒ.என்.ஜி.சி. சார்பில், எண்ணெய்க் கிணறுகள் அமைக்க 2023ம் ஆண்டு வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியிருப்பதை எதிர்த்து, விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காவிரி காப்பாளர் என்று களிப்புடன் பட்டம் சூட்டிக் கொண்டு, நானும் விவசாயி தான் என்று நல்லவர் வேடம் போடும் முதல்வர், இது குறித்து வாய் திறக்கவில்லை; அது பற்றி பேரவையில் விவாதிக்கவும் நேரம் ஒதுக்கவில்லை.

விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்திருக்கிறார். வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாட்டில் உள்ள விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அதிமுக இதனைப் பாராட்டி ஆதரித்திருப்பது, விவசாயி வேடத்தில் உள்ள  பழனிசாமி அரசு,

‘அரசியல் வியாபார அடிமை அரசு’ என்பதை அப்பட்டமாக நிரூபித்திருக்கிறது! அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி - வஞ்சிக்கும் அ.தி.மு.க. ஆட்சி குறித்து, ஜனநாயக ரீதியாக பேரவையில் பேசுவதற்கோ - ஆரோக்கியமான விவாதத்திற்கோ இடமளிக்கப்படுவதில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, பணி கிடைக்காமல் காத்திருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ள நிலையில், முதுநிலை (சீனியாரிட்டி) அடிப்படையில் அவர்களுக்குப் பணி வழங்காமல், தொடர்ந்து தகுதித் தேர்வுகளை நடத்தி, மற்றவர்களைப் பணியில் சேர்த்து வருவதால், தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காமல் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுகுறித்துப் பேரவையில் பேசுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

ஜனநாயக மாண்புகளுக்கு இடமளிக்காமல், எதிர்க்கட்சிகளின் விவாதங்களுக்கு நேரம் வழங்காமல், மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல், ஆள் இல்லாத இடத்தில் கம்பு சுழற்றி, செயற்கையான வீராவேசம் காட்டி, ஊடக வெளிச்சம் தேடிக் கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, உரத்த குரலில் பொய்களைப் பேசி, பரப்பிட  நினைக்கும் அதிமுக அரசின் கபடவேடமும், கண்மூடித்தனமான  நாடகமும், அதிகக் காலம் நீடிக்காது. ஆட்டம் முடியும். ஆறு மாதத்தில் விடியும். சட்டமன்ற நாடகத்திற்கு மக்கள் மன்றம் திரைபோடும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: