அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடிவு: கமிஷனர் பிரபாகர் காணொலி காட்சி வாயிலாக நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,120 கோயில்கள் உள்ளது. இக்கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்புக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் மீட்கும் வகையில் ஐகோர்ட் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்கள் வருவாய்த்துறை ஆவணங்களை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம், அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள நிலங்கள் ஏராளமானவை மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட நிலங்கள் உட்பட அனைத்து கோயில் நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

மேலும், அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஏற்கனவே முடிவு பெற்ற திருப்பணிகள், தற்போது நடந்துவரும் திருப்பணிகள் குறித்தும், அறநிலையத்துறை மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தளதில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தேசிய தகவல் மையம் சார்பில் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், நாளை காலை 11 மணியளவில் ஆணையர் தலைமையில் இணையவழி காணொலி காட்சி மூலம் திருப்பணி, நிலங்கள் மற்றும் வழக்கு தொடர்பான விவரவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு, தேசிய தகவலியல் மையத்தினால் (நிக்) செயல்முறை விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து காணொலி சீராய்வு கூட்டத்திற்கு  அலுவலர்கள் திருப்பணி, நிலங்கள் மற்றும் வழக்கு  தொடர்பான விவரவங்களுடன் ஆஜராகி கூட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே காணொலி இணைப்பில் இணைந்து சீராய்வுக்கு ஆயத்தமாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த காணொலி கூட்டத்திற்கு தேவையான இணைய இணைப்பு முகவரி கூட்ட நாளான நாளை காலை அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். அனைத்து மண்டல இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்களுக்கு இந்த அறிவிப்பினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: