தலைமையின் உத்தரவை மீறி அடித்துக் கேட்டாலும் கருத்து சொல்ல மாட்டேன்: அமைச்சர் உதயகுமார் பேட்டி

சென்னை: திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. தற்போது வைரஸ் பாதிப்பு 7 சதவீதம், 5 சதவீதம் என  குறைந்து வருகிறது. இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் உயிரிழக்கின்றனர். இதனால் இத்தகைய நோய் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிக்கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கருத்து சொல்ல எந்த தடையும் தலைமை விதிக்கவில்லை. அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதிமுக கட்டுப்பாடு இல்லாத கட்சி என்ற நிலையை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. ஆனால் நாங்கள் எப்போதுமே கட்டுப்பாட்டை மீற மாட்டோம். தொண்டர்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதை நான் உள்பட கட்சி தொண்டர்கள் எவரும் மீற மாட்டோம். அமைச்சராக உள்ள நானும் கட்சித் தலைமையின் உத்தரவை மீறி  அடித்து கேட்டாலும் கருத்து சொல்லமாட்டேன். அதை மீறி சொல்பவர்கள் யாராக இருந்தாலும் வீட்டுக்குத்தான் போக வேண்டும். ஒரு கட்சி நடத்துவதே ஆட்சி அமைக்கத்தான்.

இதை தவறு என்று சொல்ல முடியாது. அதே சமயத்தில் நாங்கள் மக்களுக்காக செய்த சேவையும் நலத்திட்டங்களும்  அம்மாவின் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள். முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்சும் ராம லட்சுமணன் போல் செயல்படுகின்றனர். அவர்கள் வழியை தொண்டர்கள் அனைவரும் பின்தொடர்ந்து செல்வோம். இவ்வாறு  அவர் கூறினார். ஆய்வின் போது சிறப்பு அதிகாரி டோமிவர்கீஸ், மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ குப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: