விவசாயிகள் நேரடி விற்பனைக்கு ‘ஆப்’ அறிமுகம்: வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிவதில்லை. இதனால் நடுவில் இருக்கும் இடைத்தரகர்களே கட்டணத்தை நிர்ணயம் செய்கிறார்கள். இதனால் பன்னாட்டு நிறுவனங்களும், இடைத்தரகர்களும் தான்  வருமானம் ஈட்டக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் கடைமடை தஞ்சை விவசாயிகள், இளைஞர்கள் அமைப்பு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்கள் விளைவித்த  பொருட்களை விவாசாயிகள் அமைப்பு வாயிலாகவும், ஓட்டுநர்கள் சங்கம் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக பேஸ் மார்கெட்டிங் செயலி மூலம் விநியோகம் செய்யப்போகிறோம். இதன் மூலம் நேரடியாக குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்களைக் கொடுக்க முடியும்.

இந்த செயலி மூலம் சர்வீஸ் கட்டணமாக 10 சதவீதம் மட்டுமே வாங்குவோம்.  அதே சமயம் ஆட்டோ, கார் என்று எல்லா வகையான வாகனங்களையும் பயன்படுத்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறி மற்றும் உணவு பொருட்களையும், வாடகை வாகனத்தையும் புக் பண்ணலாம். அதேபோல் சிறு வியாபாரிகளும் மொத்தமாக வாங்கி குவித்து வைக்காமல் தங்கள் தேவைக்கு ஏற்ற பொருட்களை வாங்கி கொள்ளலாம். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். மேலும் இரண்டு நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இந்த சேவை செயல்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: