மொழி தொடர்பான பிரச்னையில் மக்களை துண்டான நினைப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மாறிவிடும்: சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: மொழி தொடர்பான பிரச்னையில் மக்களை துண்டாட நினைப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மாறிவிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்தது. புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு கீழ் கடந்த 2014ம் ஆண்டு வெடிகுண்டு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு விடுதலைப் படையை சேர்ந்த கலைலிங்கம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலைலிங்கம் ஜாமீன் கேட்டு புதுச்சேரி முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இனம், பிரேதசம், மதம், பிரிவினைவாதம் ஆகியவற்றின் அடிப்படையில், நாட்டுக்கு எதிராக இளைஞர்களை தேசத் துரோகிகள் போராடச் செய்கின்றனர். இதற்காக வன்முறை, கலவரம் உள்ளிட்ட செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுத்துகின்றனர். மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில், தமிழ் கலாச்சாரம், தமிழ்மொழி, தமிழ்இனம் என்ற ஆயுதங்களுடன் பல அமைப்புகள் உள்ளன. இந்த ஆயுதங்களை கையில் தூக்க பல அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவும், பிற மொழிகள் மத்தியில் பாகுபாடுகளை உருவாக்குவது போலவும் ஒரு தோற்றத்தை அரசு ஏற்படுத்தினால், அது கண்டிப்பாக எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகி விடும். நம்நாடு பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்களை கொண்டது. எனவே, இவைகள் அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது என்ற எண்ணத்தை மக்களிடம் அரசு உருவாக்க வேண்டும். எனவே, நம் மொழி பாதுகாக்கப்படவில்லை. குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் இறுதியில் நீதிபதி ஆர்.ஹேமலதா தனியாக ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதில், ‘‘ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவை ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்மொழி, தமிழ் அமைப்புகள், அதை தொடர்ந்து அரசுக்கு அவர் செய்துள்ள பரிந்துரைகளை நான் ஏற்கவில்லை. இவை வழக்கிற்கு தொடர்பு இல்லாதவை. மொழிகளை கற்றுக் கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: