மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய திருத்த சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது: முதல்வர் எடப்பாடி அறிக்கை

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய திருத்த சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை, தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது என்றும் வேளாண் விற்பனை கூடங்களுக்கும், உழவர் சந்தை திட்டத்திற்கும் இது எதிரானது என்றும் எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

* விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)  சட்டத்தின்படி, ஒப்பந்தம் செய்யும் ஒரு விவசாயி மற்றும் அவரிடம் இருந்து கொள்முதல் செய்யும் நபர் ஆகிய இருவருக்கிடையே ஒருமித்த கருத்தும், ஒளிவுமறைவற்ற தன்மையும் இருத்தல் வேண்டும். முன்பே, ஒப்புக்கொள்ளப்பட்ட விலை கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், விவசாயிகள், விலைவீழ்ச்சி போன்ற பாதிப்புகளில் இருந்து காப்பாற்றப்படுவார்கள்.

* விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020-ன் வகைமுறைகளை ஆராயும்போது, இவை வேளாண் விளைபொருட்களை வணிக பகுதி என அறிவிக்கை செய்யப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் முழுமையான சுதந்திரத்தினை வழங்குகிறது.  குறைந்தபட்ச ஆதாரவிலையில் நடைபெறும் கொள்முதலும் பாதிக்காது.

* அத்தியவாசிய பொருட்கள் திருத்த சட்டம், 2020ல், தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை போர், பஞ்சம், அசாதாரணமான விலை உயர்வு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளில், கட்டுப்பாடுகளை விதிக்க அரசால் அரசிதழில் அறிவிக்கை செய்து, முறைப்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதற்கு வழிவகுக்கும் என்ற கூற்றில் துளியும் உண்மையில்லை.

 ஆகவே, இந்த சட்டங்களை விவசாயிகளின் நலன் கருதி அரசு எதிர்க்கவில்லை. இதனால் தற்போது குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் போன்றவை எந்த விதத்திலும் பாதிக்காது. பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகம் செய்வதற்காகவும், இருப்பில் வைப்பதற்காகவும், விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டில் தொடரும் என்பதால், விவசாயிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. விவசாயிகளின் நலனை காக்க, அனைத்துவிதமான உறுதியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடர்ந்து எடுக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: