புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்: பார்த்தசாரதி கோயிலில் தரிசன நேரம் நீட்டிப்பு

சென்னை: புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உட்பட சென்னையில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டன. ெதாடர்ந்து இக்கோயில்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதை பின்பற்றி தான் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி முதல் புரட்டாசி மாதம் பிறந்தது. வழக்கமாக புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்களில் திருவிழா களைகட்டுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, சுவாமி புறப்பாடு கோயில் மாட வீதிக்கு பதிலாக கோயில் வளாகத்திலேயே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க கூடாது என்பதால், அந்த நேரத்தில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கவும் அறிவுரை வழங்கியுள்ளன.

இந்நிலையில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதற்காக, அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் இலவச, சிறப்பு தரிசனத்துக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், புரட்டாசி சனிக்கிழமை என்பதால், பார்த்தசாரதி கோயில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி முதல் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், நேற்று காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்று மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், ஆதிகேசவ பெருமாள் உட்பட சென்னை மாநகரில் உள்ள பெருமாள் கோயில்களில் கால நேரம் நீட்டிக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கோயில்களில் ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 80 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதனால், கோயிலில் சமூக இடைவெளியுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: