×

மழையால் நெற்கதிர்கள் சாய்ந்தன; கன்னிப்பூ அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இருபோக நெல் விவசாயம் நடந்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை நம்பியே இந்த நெல் விவசாயம் நடக்கிறது. மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் சுமார் 6500 ஹெக்ேடர் பரப்பளவில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில், நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குமரி மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் திறந்தது. இங்கு 100 கிலோவுக்கு ரூ.1865 வழங்கப்படுகிறது.  மாவட்டத்தில் முதலில் பறக்கை, சுசீந்திரம் பகுதியில் நெல் அறுவடை நடந்தது. இந்நிலையில் தாழக்குடி, தெரிசனங்கோப்பு, கடுக்கரை, செண்பகராமன்புதூர், இறச்சகுளம், பார்வதிபுரம், ஈசாந்திமங்கலம் உள்பட பலர் பகுதிகளில் இன்னும் அறுவடை நடக்க வில்லை. அறுவடை தொடங்கும் நிலையில் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் அறுவடைக்கு தயாரான நிலையில் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக பல வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. மழை விட்டு வெயில் அடிக்கும் நாளில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யும் நெல்களை வியாபாரிகள் நேரடியாக வயல்களில் வந்து விலைக்கு வாங்கி செல்கின்றனர். அதிக ஈரப்பதத்துடன் இருக்கும் நெல்லை வியாபாரிகள் ஒரு கோட்டை (87 கிலோ) ரூ.1100க்கு வாங்குகின்றனர். ஆனால் நெல் ஈரம் இல்லாமல் கொடுத்தால் ரூ.1200 வரை விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். மழையில் வயல்கள் மூழ்கியதால், வைக்கோல்கள் எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வைக்கோல் மூலம் கிடைக்கும் வருமானம் தடைப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: கன்னிப்பூ சாகுபடி செய்த போது காலநிலை ஒத்து வந்தது. இதனால் வயல்களில் அதிக விளைச்சல் இருந்தது. செப்டம்பர் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த காலத்தில் அறுவடை நடக்கும்.

இதனால் நெல், வைக்கோல் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். ஆனால் இந்த வருடம் வெயில் அடிக்கும் காலமான செப்டம்பர் மாதத்தில் மழை பெய்து, அறுவடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நல்ல மகசூல் இருந்தும், அதனை அறுவடை செய்து எடுக்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்தது 20 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு ஏக்கர் நிலத்தில் வைக்கோல் மூலம் அனைத்து செலவு போக ரூ.5 ஆயிரம் கிடைக்கும். ஆனால் தற்போது பெய்த மழையால் வைக்கோல் அனைத்தும் அழுகியுள்ளது. இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் நல்ல மகசூல் இருந்தும் இந்த மழையால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர் என்றார்.Tags : The rice paddies were tilted by the rain; Farmers suffer from not being able to harvest mulberry
× RELATED நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்