×

வேளாண் மசோதா தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும்; முதல்வர் பழனிசாமி அறிக்கை

சென்னை: வேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார். மேலும், வேளாண் மசோதா தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த அம்சங்களும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த 17 ஆம் தேதி விவசாய உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம்  சட்டம், விவசாயிகள் விலை ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தச்) சட்டம் ஆகிய மூன்று சட்ட மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசின் இந்த சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலிதள கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி கூட்டணிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்களுக்கு அதிமுக ஆதரவளித்தது குறித்து தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் இந்த சட்டம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது; மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்பதால் அதிமுக அரசு அதை எதிர்க்கவில்லை. மேலும் இந்த சட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த ஷரத்துகளும் இல்லை என்று கூறியுள்ள அவர் மக்களவையில் நிறைவேறி உள்ள சட்டங்களால், தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Bill ,Palanisamy ,Tamil Nadu , Agriculture Bill will benefit Tamil Nadu farmers with a steady income; Chief Minister Palanisamy's statement
× RELATED வேளாண்மை மசோதாவுக்கு எதிராக...