கொரோனா அச்சத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு..!! அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் விடுமுறையின்றி அக்டோபர் 1-ம் தேதிவரை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக காலை நேரத்தில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் கூட முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வரும் எம்.பி.க்கள் அனைவரும் 72 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

நாடாளுமன்றப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், கடும் கட்டுப்பாடுகளுக்குப் பின்பே நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் எம்.பி.க்களுக்கு இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன. பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையிலும் எம்.பி.க்கள் பலர் பாதிக்கப்பட்டனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பிரகலாத் படேல் ஆகிய இருவரும் கூட்டத் தொடரில் பங்கேற்றபின் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து எம்.பி.க்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதால், 18 நாட்கள் கூட்டத்தொடரைத் தொடர்ந்து நடத்துவது ஆபத்தானது என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் மத்திய அரசிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கூட்டத்தொடர் நடத்தப்படும் நாட்களைக் குறைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசிக்கத் தொடங்கி முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: