கட்டுமானப்பணிக்கு பணம் வராததால் சிவகாசி அருகே பள்ளிக்கு பூட்டு; ஒப்பந்ததாரரால் பரபரப்பு

சிவகாசி: சிவகாசி ஒன்றியம் தச்சகுடி ஊராட்சியில் தாழைப்பள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் ஓடுகள் சேதமடைந்து காணப்பட்டதால் ஓடுகளை அகற்றி கான்க்ரீட் கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அப்போதைய எம்பி ராதாகிருஷ்ணணிடம் கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து 2018-2019ம் ஆண்டு எம்பி தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டது. கட்டுமான பணி முடிந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் பள்ளி கட்டிடம் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட பள்ளியில் கட்டுமான முடிந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. பணி முடித்த ஒப்பந்ததாரருக்கு பணம் வராததால் கட்டிடத்தின் சாவியை அவரே வைத்துள்ளார். இதனால் கடந்த கல்வி ஆண்டிலும் சேதமடைந்த கட்டிடத்தில்தான் பள்ளி மாணவர்கள் படித்தனர். தற்போது பள்ளி திறந்தால் கூட பழைய கட்டிடத்தில்தான் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பள்ளி கட்டிடங்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, தாழைப்பட்டி பள்ளி கட்டிடத்தை உடனடியாக திறந்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: