ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏழை குழந்தைகளுக்கு உரிய உபகரணங்கள், இணைய சேவைகள் வழங்க வேண்டும் : பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

புதுடெல்லி: ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏதுவாக ஏழை குழந்தைகளுக்கு உரிய உபகரணங்கள் மற்றும் இணைய சேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,கொரோனா காலத்தில் அனைத்து பள்ளிகூடங்களிலும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறுகிறது. இந்த நிலையில் பல்வேறு சூழல் காரணமாக டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் அரசு உதவிப்பெறாத தனியார் நிர்வாகம் தங்களது பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏதுவாக உரிய உபகரணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்க பள்ளிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள நான்கு தனியார் பள்ளிகள் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது அதில், ஏழை குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி தருவதில் தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், டெல்லியில் உள்ள 10 அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் பயிலும் ஏழை குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் விதமாக அதற்கான உபகரணங்கள் மற்றும் இணைய சேவைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு உதவி பெறாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் மொத்த இடங்களில் 25 சதவீத இடத்தினை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்கவேண்டும் என்பது விதியாக உள்ளது. அதில் குழந்தைகளுக்கு தேவையான சீருடை ,புத்தகம் உள்ளிட்ட படிப்பிற்கு தேவையான அனைத்தும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் தரப்பில் இலவசமாக தர வேண்டும் என்பதும் சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.அந்த சட்டத்தின் அடிப்படையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக பிறப்பித்த உத்தரவில் நீதிபதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: