கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றல் கபசுரக் குடிநீருக்கு இருப்பதை ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர் : மத்திய அரசு விளக்கம்!!

டெல்லி: கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் கபசுரக்குடிநீருக்கு இருப்பதை ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு (கேள்வி எண்;1081) மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்.

இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிட்டத்தட்ட 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடி நீரும் நில வேம்புக் குடி நீரும் வழங்கப்பட்டமையும், அதில் நடத்தப்பட்ட ஒன்பது விதமான நோயர்களிடமான ஆய்வு, நான்கு வகையான முதல் கட்ட அடிப்படை ஆய்வுகள் மூலம் சித்த மருந்தான கபசுரக் குடி நீர் வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதையும், கோவிட் நோயில் நோய் எதிர்ப்பாற்றல் தருவதையும் ஆயுஷ் துறை விஞ்ஞானிகள் ஆய்ந்தறிந்திருப்பதை மக்கள் நலவாழ்வுச் அமைச்சர் தன் பதிலில் கூறியுள்ளார்.

கூடவே, இக்குடிநீர் இரத்த உறைதலை தடுப்பதிலும், ரெடம்சிவீர் (Redemsivir) முதலான மிக முக்கிய நவீன ஆண்ட்டி வைரஸ் மருந்துகள் செயல்படுவது போல கபசுரக் குடி நீர் செயல்பட வாய்ப்பிருப்பதை முதல் நிலை ஆய்வுகள் அறிவித்திருப்பதைத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, இந்த துவக்க நிலை ஆய்வுத்தரவுகளை, இந்தியாவின் மொத்த அறிவு வளத்தின் துணை கொண்டு, மிகத்துல்லியமான ஆய்வுகளை நடத்தி, உலக அரங்கில் இதன் பயனை அறிவிக்க வேண்டும்.

சீன மருத்துவத்தின் பயன் உலக அரங்கில் கோலோச்சுவதற்குக் காரணம், அங்குள்ள அரசு அதன் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் அறிவியல் ஆய்வுகளாலும், அதனை அறிவியல் மொழியில் முன்வைப்பதாலும் தான்.

சித்த மருத்துவத்தை அப்படிக் கொண்டு செல்ல மத்திய அரசு, முழு வீச்சில் இந்த ஆய்வுகளைத்தொடர பொருளாதாரம் மனிதவளம் உள்ளிட்ட அனைத்து ஆதரவையும் வழங்கிட வேண்டும்.

இன்று கோவிட்-19 இல் ஆயுஷ் துறையில் நடத்தப்படும் முறையான ஆய்வுகள் வருங்காலத்தில் இப்படியான புதிய நுண்ணுயிரால் வரும் பேரிடர் நெருக்கடியில் நம்மைப் பாதுகாக்க, தயார் நிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

கேள்வி பதிலின் முழுவிபரம் பின்வருமாறு:

கேள்வி: கொரோனா சிகிச்சையில் தமிழகத்தில் கபசுரக்குடி நீர் உள்ளிட்ட சித்த மருத்துவம் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது. மத்திய ஆயுஷ் துறை அதில் எந்த எந்த ஆய்வு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன?

பெருவாரியான மக்களுக்கு விநியோகிக்கப்படும் கபசுரக்குடி நீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் மீது மேலாய்வுகள் செய்வது, முழுமையான anti Covid மருந்துகளை உருவாக்கும் ஆய்வுகள், அலோபதி-ஆயுஷ் கூட்டு மருத்துவ சிகிச்சை ஆய்வுகள் என்ன அளவில் நடைபெற்றுவருகின்றன?

ஆயுஷ் துறை இதில் இதுவரை எடுத்துள்ள ஆய்வு நடவடிக்கைகள் என்ன?

அமைச்சரின் பதில்: ஆமாம். தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் கபசுரக் குடி நீர் உள்ளிட்ட பல சித்த மருந்துகளைக் கொண்டு கோவிட் 19 நோயை கையாண்டு வருவதை மத்திய அரசு நன்கு அறியும் . மத்திய ஆயுஷ் துறையானது, சித்த மருத்துவர்களுக்கு கோவிட் நோய்க்கான சித்த மருத்துவ வழிகாட்டுதல் அளித்தும், சித்த மருந்துகளின் மீது ஆய்வுகள் நடத்த அனைத்து ஊக்குவிப்பும் செய்தும் வருகின்றது . மத்திய சித்த ஆராய்ச்சி நிலையமும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் முழுவீச்சில் பலகட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. EMR வழியாக பிற ஆய்வு நிறுவனங்கள் கோவிட் 19 நோயில் சித்த மருந்துகளில் ஆராய்ச்சி செய்யவும் பரிந்துரைகள் விண்ணப்பங்கள் பெறப்படுள்ளன.

இதன் முழு விபரங்கள் பின் வருமாறு

இணைப்பு-1

தமிழகத்தில் மட்டும் 29 சித்த மருத்துவ கோவிட் கேர் சென்டர்கள் நியமிக்கப்பட்டு, கிட்டத்தட்ட இதுவரை 16563 பேர் சித்த மருந்துகளால் மட்டுமே கோவிட் நோயில் இருந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஏறத்தாழ 120 மெட்ரிக் டன் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் தமிழகத்தில் விநயோகிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 23 இலட்சத்து 37 ஆயிரத்து 395 பேருக்கு கபசுரக் குடிநீரும் ஒரு கோடியே 32 இலட்சத்து 53 ஆயிரத்து 115 பேருக்கு நிலவேம்புக்குடி நீரும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் சித்த மருத்துவமனைகளும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் தமிழக அரசுடன் இணைந்து இப்பணியில் முழு வீச்சில் இயங்கி வருகின்றன.

ஆயுஷ் துறையின் பிரிவான சித்த மருத்துவத்தில் கபசுரக் குடி நீர், நிலவேம்புக்குடி நீர், பிரமானந்த பைரவம், விஷசுரக் குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, அதிமதுர மாத்திரை, தாளிசாதி சூரணம், சீந்தில் சூரணம், முதலான மருந்துகள் கோவிட் 19 நோயில் பல கட்டத்தில் பயன்படுத்தப்பட அறிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.

இம்மருந்துகள் மீது பல கிளினிக்கல் மற்றும் ப்ரீ கிளீனிக்கல் ஆய்வுகள், அதாவது நோயாளிகளிடமும் - நோயாளிகளுக்கு முந்தையதாக அடிப்படை மருத்துவ ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தற்போது நடத்தப்பட்டு வரும் /நடந்து முடிந்த ஆய்வுகளின் விபரங்கள் பின்வருமாறு:

ப்ரீ கிளீனிக்கல் ஆய்வு:

1. மூலிகை மருந்துகள் மீதான உயிர் கணிணி தகவல் தொழில் நுட்ப ஆய்வுகள் (Docking studies).

2. நோய் எதிர்ப்பாற்றல் செய்கை ஆய்வுகள்( Immuno modularity studies)

3. இரத்த உறைதலைத் தடுக்கும் செய்கை (Thrombolytic studies)

வைரஸ் எதிர்ப்பு ஆய்வு:

ஆங்கில மருந்தான ரெடம்சிவிர் போன்றே வைரஸ் பரவுதலைத் தடுக்கும் ஆற்றல், சித்த மருந்தான கபசுரக் குடி நீருக்கு இருப்பதை அறியும் ஆய்வு. இந்த ஆய்வில் கபசுரக் குடிநீருக்கு சார்ஸ் கோவிட் 2 வைரஸ் பரவுதலை குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டுப்படுத்தும் தடுக்கும் செய்கை அறியப்பட்டுள்ளது.

கிளீனிக்கல் ஆய்வு:

ஒன்பது வகையான வேறுபட்ட இலக்குகளுடன் கீழக்கண்ட ஆய்வுகள் நடைபெற்றுள்ளன

1. கபசுரக்குடிநீர் எடுத்த 20,000 சுகாதார ஊழியர்களிடம் ஆய்வு

2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கபசுரக் குடி நீர் மீதான open randomised clinical trial. வைரல் அளவு குறைவதை, நோய் எதிர்ப்பாற்றல் உயர்வை அறியும் ஆய்வு இது,

3. கோவிட் நோய் நிலையில், எதிர்ப்பாற்றல் விஷயத்தில் கபசுரக்குடி நீர் மற்றும் விட்டமின் சி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க, நடத்தப்பட்ட தேனி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ஆய்வு

4. கோவை மருத்துவக்கல்லூரி - ஈ எஸ் ஐ மருத்துவமனை இணைந்து கபசுரக்குடி நீர் மற்றும் விட்டமின் சி - சிங்க் சத்து கூட்டு சிகிச்சையின் பயன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வு

5. முதல் நிலை மருத்துவ பணியாளருக்கு கபசுரக் குடி நீரால் ஏற்பட்ட பாதுகாப்பு ஆய்வு

6. மக்களிடையே கோவிட் 19 நோய் நிலையில் சித்த மருந்துகளின் பயன்பாட்டு விழிப்புணர்வு ஆய்வு

7. சென்னை நோய்த்தடுப்பு முகாம்களில் தங்கியிருந்தோருக்கு கபசுரக் குடிநீர் பயன்பட்ட ஆய்வு

8. SSMRi file எனும் கபசுரக் குடி நீர் கோவிட் நிலையில் பயன்பட்ட ஆய்வு

9. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கபசுரக் குடிநீர் மீதான ஆய்வு.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>