×

ஊரடங்கு காலத்தில் கடனை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்கு: வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.!!!

டெல்லி: வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா 2020 மாநிலங்களவையில் நிறைவேறியது. வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி, அதை செலுத்தாமல் உள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் மீது, கடன் நொடிப்பு  திவால் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க, குறிப்பிட்ட வங்கிக்கு தற்போது உள்ள சட்டப்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது வங்கிகள் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டத்தைப் பயன்படுத்தி, கம்பெனி அல்லது  வியாபாரத்தை முழுமையாக கைப்பற்றி விடும். கைப்பற்றிய கம்பெனி அல்லது வியாபாரத்தை வேறு ஒருவருக்கு விற்று சொத்துக்களை விற்று வரும் பணத்தை வங்கிகள் கொடுத்த கடன் மற்றும் அதற்கான வட்டியைக் கழித்துக்  கொள்வார்கள். மீதி பணம் இருந்தால் கடன் வாங்கியவருக்கு கொடுப்பார்கள்.

இதற்கிடையே, கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கத்தின் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், அந்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், வங்கி திவால்  சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் தொழில் நிறுவனங்ககளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கி திவால் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டம்  2020-ல் திருத்தும் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா 2020-ஐ மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய் கிழமை 15-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதா தற்போது பல்வேறு கட்ட விவாதங்களுக்கு பிறகு  மாநிலங்களவையில் நிறைவேறியது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த 6  மாதங்கள் அல்லது அதற்கும் மேல் நீட்டிக்கபப்டும் வரை இந்த காலகட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது தற்காலிகமாக இந்த மசோதா  மூலம் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மார்ச் 25ம் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா 2020 மாநிலங்களவையில் தொடர்ந்து மக்களவையில் நிறைவேற்றப்படவுள்ளது. மக்களவையில் போதுமான ஆதரவு மத்திய அரசுக்கு உள்ளதால் அங்கும் எளிதில் மசோதா நிறைவேறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : companies ,curfew , Exemption from taking action against companies that do not repay loans during the curfew: Bankruptcy law amendment bill passed in the state legislature.
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...