×

வேளாண் தொடர்பான மசோதாக்கள் ஏற்கனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது : டிடிவி தினகரன்

சென்னை : மசோதாக்களில் உள்ள விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களில் திருத்தம் செய்த பிறகே மாநிலங்களவையில் அவற்றை கொண்டுவர வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பாக டிடிவி தினகரன் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விவசாயத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட மசோதாக்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையாக ஆலோசிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி இருப்பது சரியானதல்ல. இம்மசோதாக்களில் உள்ள விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களில் திருத்தம் செய்த பிறகே மாநிலங்களவையில் அவற்றை கொண்டுவர வேண்டும். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையில் செயல்படுத்தப்படும் எத்தகைய மாற்றமும் விவசாயிகளுக்குப் பயன்தருவதாக மட்டுமே அமைய வேண்டும். அதைவிட்டு விட்டு ஏற்கனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : DTV Dhinakaran , வேளாண் ,மசோதாக்கள்,விவசாயிகள் ,டிடிவி தினகரன்
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...