×

காற்றில் பறக்கும் அரசு உத்தரவு பஸ்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கடைபிடிப்பதில்லை

ஈரோடு : கொரோனா தடுப்பு விதிமுறைகள் அரசு பஸ்களில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதால் பயணிகள் கொரோனா அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த 1ம் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்களில் பயணிகள் பின்புற படிக்கட்டுகளை ஏறுவதற்கும், முன்புற படிக்கட்டுகளை இறங்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். பஸ்சில் பயணம் செய்வதற்கு முன்னதாக, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

முன்புற மற்றும் பின்புற படிக்கட்டுகளில் சானிடைசர் இருப்பதை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பயணத்தை நிறைவு செய்தவுடன் கிருமிநாசினி கொண்டு பஸ் சுத்தம் செய்யப்பட வேண்டும். ஏ.சி.பஸ்களில் ஏசியை உபயோகிக்க கூடாது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 60 சதவீத பயணிகளுடன் மட்டுமே பஸ்கள் இயங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மற்றும் டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த விதிமுறைகள் அனைத்தும் பஸ் போக்குவரத்து துவங்கிய முதல் நாளில் பின்பற்றப்பட்டன. பின்னர், 90 சதவீத பஸ்களில் எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக, தொலைதூர பஸ்களில் கூட படிக்கட்டுகளில் சானிடைசர் வைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பஸ்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் இருப்பது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் முகக்கவசம் அணியவில்லை என அபராதம் விதிக்கும் அரசு, அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும், பயணிகளுக்கும் அபராதம் விதிக்க மறுப்பது ஏன்? என பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பஸ்களில் பின்பற்றப்படுகிறதா? என்பதை அந்தந்த உள்ளாட்சித்துறை பணியாளர்கள் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசாரை வைத்து சோதனை நடத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Corona , கொரோனா தடுப்பு விதிமுறை,அரசு பஸ்,பயணிகள் ,அபாயம்
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...