மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் பிரதமர் மோடியின் ‘நண்பர்களின்’ வர்த்தகத்தை தான் அதிகரிக்கும் : ராகுல் காந்தி காட்டம்!!

டெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்கள்  மோடி அரசு ‘நண்பர்களின்’ வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பாக ராகுல் காந்தி தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மோடி ஜியின் அறிக்கையும் செயல்களும் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமாக இருந்ததால் விவசாயிகள் மோடி அரசு மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர் - பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி கொள்கை மற்றும் டீசல் மீதான அதிக வரி உள்ளிட்டவை மூலம் விவசாயிகள் விழித்துள்ளனர் - மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள்  மோடி அரசு ‘நண்பர்களின்’ வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் தங்களின் வாழ்வாதாரத்தைத் தாக்கும் என்பதை விவசாயிகள் நன்கு அறிவர், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: