×

பெற்றோருக்கு...

நன்றி குங்குமம் தோழி

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் வலுத்துவரும் வேளையில், பெண் குழந்தைகளை பெற்றவர்கள் கொஞ்சம் திகிலோடுதான் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் தொடர்ந்து பெண்கள், பெண் குழந்தைகள் மீது நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகள் பெண்களை பெற்றவர்களை நிறையவே கவலைகளோடு சிந்திக்க வைக்கிறது. பெண் குழந்தைகளை பாதுகாத்து  வளர்க்கும் முறைகளைப் பற்றி கிருஷ்ணி கோவிந்த் என்கிற பெயரில் ‘குட் டச் பேட் டச்’ புத்தகம் எழுதியவரும் வழக்கறிஞருமான விஜி ராமிடம் இது பற்றி கேட்டோம்...

1. அடுத்தவரிடம் எப்படி பழக வேண்டும் என்று ஒரு வரையறை மிக அவசியம், அது பெரியவர்களானாலும் வளர்ந்த குழந்தையானாலும் அவர்களிடம் எப்படி பழகவேண்டும். என்ன எல்லை என்பதை உங்கள் குடும்பச் சூழ்நிலை பொறுத்து நீங்களே தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

2. குழந்தைகளுக்கு விரும்பத்தகாத சூழ்நிலை, வேண்டாத நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் இருந்து எப்படி உடனே வெளியேறுவது என்பதை கற்பிக்க வேண்டும்.

3. பயப்படும்படியான சூழலோ, பாதுகாப்பாக உணராதபோது உங்களிடம் பேச நேர்ந்தால் அவர்களின் நிலையை உணர்த்த ஒரு கோட்வேர்ட் வைத்துக்கொள்ளலாம்

4. ‘பாடி பவுண்டரிஸ்’ எனப்படும் உடலின் பிரத்யேக பகுதிகளை கற்றுக் கொடுங்கள். உடம்பில் ரகசியம் என்று எதுவும் இல்லை. எல்லாமே குறிகோள் சொற்கள் இன்றி நேரடியான சொற்கள் மூலம் கற்றுத்தரப்பட வேண்டும்

5. அந்நியர்கள் அல்லது நண்பர்கள், உறவினர்களே ஆனாலும் அவர்களை உடையையோ, உடலையோ தொட்டு பேசுவதை, தொடுவதை தவிர்த்தல் வேண்டும்

6. யாராக இருந்தாலும் குழந்தைகளின் தனிப்பட்ட உறுப்புகளை படம் எடுக்க அனுமதிக்கக் கூடாது.

7. குழந்தைகளின் நம்பிக்கைக்கு உரியவராக பெற்றோர் இருக்க வேண்டும். எந்த ஒரு விசயத்தையும் உங்களிடம் சொல்லலாம். சொன்னால் எந்த பின் விளைவும் அவர்களை காயப்படுத்தும் விதமாக இருக்காது என்ற நம்பிக்கை அவர்களிடம் வரவேண்டும்.

8. குழந்தைகள் விரும்பாமல் பெற்றோர்கள் வீட்டிலோ, வெளியிடத்திலோ, நண்பர்களையோ உறவினர்களையோ கட்டிப்பிடிப்பது, கூட வாகனங்களில் பயணிப்பது போன்ற விசயங்களில் கட்டாயப்படுத்தக் கூடாது.

9. உடலின் பாகங்களையும், உடல் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் தெளிவாக அடிக்கடி எடுத்துரைக்க வேண்டும்.

10. உடல் சுத்தம், பர்சனல் ஹைஜீன் பற்றி எந்த தயக்கமும் இல்லாமல் கற்றுத்தர வேண்டும்.

11. குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பீடு செய்வது நாம் செய்யும் பெரிய தவறு. அவர்களின் சிறிய தவறுகளுக்கும் பெரிதாக தண்டிப்பதும், ரியாக்ட் செய்வதும் தேவையற்றது.

12. புதிய விசயங்கள் செய்ய, முயற்சிக்க அவர்களை தூண்ட வேண்டும். ஏதேனும் எப்போதும் கற்றுக்கொண்டிருப்பது அவர்களின் மனச்சோர்வை நீக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் சிறந்த வழிமுறை.

13. உங்களுக்கு அவர்கள் மேல் இருக்கும் அக்கறையை அவர்களுக்கு உணர்த்த வேண்டியதும், குடும்பமே அவர்களுக்காக இருப்பதை உணர வைப்பதும் அவசியம்.

14. பிள்ளைகளுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

15. குழந்தைகளை வீட்டிற்குள்ளே அடைத்து வைக்காமல் வெளி இடங்களுக்குக் கூட்டிச் செல்லும் போது வெளி உலக மனிதர்களை குழந்தைகள் புரிந்து கொள்ள இயலும்.

16. குழந்தைகள் நம் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கீழே விளையாடப் போய் இருக்கும் பிள்ளை வர தாமதமானால் ஏன் என்று நாம் கீழே போய் பார்க்க வேண்டும். தாமதமான காரணத்தை அவர்கள் வந்து சொல்லட்டும் என்று அசிரத்தையாக இருக்கக்கூடாது. அங்கே போய் பார்த்தால்தான் என்ன நடக்கிறது என்று தெரியும்.

17. குழந்தைகள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஒதுக்குகிறேன் பேர்வழி என்று எங்காவது மாலுக்கு கூட்டிச் சென்று ஓட்டலில் எதாவது வாங்கிக்கொடுத்து கூட்டி வருவது போன்ற செயல்கள் அல்ல இன்றைய தேவை. அவர்களது தேவை ஐஸ்கிரீம் அல்ல. அரவணைப்பு. பிள்ளைகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கேட்க வேண்டும். மற்றபடி எவ்வளவு காசு பணம் செலவழித்தாலும் எந்த வித பிரயோசனமுமில்லை. அவர்களது தேவை எல்லாம் அன்பும், அக்கறையும்தான்.

18. குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

19. கேட்டட் கம்யூனிட்டியில் உள்ளவர்கள் டைம் டேபிள் போல போட்டு ஒருநாள் இன்னார், இன்னொரு நாள் இன்னார் என பார்த்துக்கொள்ளலாம்.

20. குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்க வேண்டும். அந்த உணர்வை எவ்வளவு காசு பணம் கொடுத்தும் உருவாக்க முடியாது.

21. ஒருவேளை குழந்தைகளுக்கு பாலியல்ரீதியான பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால் அப்படிப்பட்ட குழந்தைகள் குற்றவாளிகள் கிடையாது. அப்படிச் சொல்வதே தவறு. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மனதில் ஆழமான வடு ஏற்பட்டிருக்கும். அதிலிருந்து குழந்தையை மீட்பது  பெற்றோர்களின் கடமை. குழந்தையின் மீது அக்கறையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை கொடுக்க வேண்டும். அதற்கு பெற்றோர்களும் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அக்கம் பக்கத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு இப்படி ஏதேனும் நடந்தால் அவர்களை வித்தியாசமாகப் பார்ப்பதும் அச்சம்பவம் பற்றி அக்குழந்தையிடம் பேசுவதும் கூடாது.

22. பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்கிறோம். அதையும் மீறி சில விஷயங்கள் இப்படி நடக்கும் போது அந்த காயத்தில் இருந்து அந்த குடும்பம் வெளிவர சுற்றி இருக்கும் சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கிறது. வதந்தி பேசுவது, அந்த செய்திக்கு கை-கால் முளைக்க வைத்துப் பரப்புவது, பார்க்காத விஷயத்தை பார்த்தது போல் சொல்வது போன்ற விஷயத்தை செய்வது கூடாது. அதாவது தேரை இழுத்து தெருவில் விடாதீர்கள். நம் வீட்டில் நடந்தால் அது சம்பவம் அடுத்தவன் வீட்டில் நடந்தால் அது செய்தி. நம் வீட்டில் இத்தகைய துன்பம் நேர்ந்திருந்தால் எப்படி நடந்துகொள்வோமோ அது போல் பாதிக்கப்பட்ட குடும்பத்திடமும் அக்கறையோடு இருங்கள். அது சாத்தியமில்லாத போது அவர்களிடம் இயல்பாகவாவது இருங்கள்.

23. உலகில் பிறந்த அனைத்து உயிரினமும் தன் வாழ்வை அழகாக ரசனையாக வாழ உரிமை படைத்தவை. அவர்களில் குழந்தைகள் இன்னும் சிறப்பு சலுகைகள் கொண்டவர்கள். ஏதோ சில பாதகர்களால் அவர்களின் குழந்தைமை இல்லாமல் போவதால் அவர்கள் வாழ்நாள் முழுதும் கூட்டுக்குள் முடங்கவும் தேவையில்லை. ‘பாதகம் செய்பவரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு,  அவர்கள் முகத்தில் உமிழ்ந்துவிடு’ என்று அந்த நாட்களில் பாரதி கூறிய அறிவுரை அன்று மட்டுமல்ல இனி எப்போதும் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரவேண்டிய முக்கிய பாடம்.

-ஸ்ரீதேவி மோகன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!