×

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன் : நடிகர் சூர்யா டுவீட்

சென்னை: தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நீட்  தற்கொலை குறித்து சூர்யா தெரிவித்த கருத்து நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளது எனக்கூறி சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார்.இதையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். இதுதொடர்பாக, சூர்யா மீது உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாமா என்பது குறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கருத்து கேட்டது. ஆனால் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு தொடர தேவையில்லை என தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தலைமை நீதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

தொடர்ந்து, இதுதொடர்பாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில், இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று தெரிவித்தனர். மேலும் தன்னளவில் சரியாக நடந்துக் கொள்வதாக கூறும் சூர்யா போன்றவர்கள், நீதித்துறை மீது விமர்சனங்களை வைப்பதற்கு முன்பாக அது நியாயமானதா இல்லையா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய நீதித் துறை தான் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளார். நீதித்துறையின் பெருந்தன்மையை ஏற்பதாகவும் உயர்நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாகவும் சூர்யா பதிவிட்டுள்ளார். 


Tags : court ,Actor Surya , Order, humility, actor Surya, tweet
× RELATED விளம்பரங்களுக்கு அனுமதி தருவதில்...