×

வனத்தோட்ட கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல்

*பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

அறந்தாங்கி : அறந்தாங்கியில் உள்ள தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. தற்போது இந்த அலுவலகத்தில் மண்டல மேலாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்ட மண்டல அலுவலர், இங்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். பொறுப்பு மண்டல மேலாளர் அறந்தாங்கி அலுவலகத்திற்கு வராததால், இங்குள்ள பணிகள் அலுவலக சூப்பிரண்டு வள்ளிக்கண்ணு பொறுப்பிலேயே நடந்து வந்தன.

தமிழ்நாடு வனத்தோட்டக் கழக அறந்தாங்கி மண்டல மேலாளர் அலுவலக கட்டுப்பாட்டில் அறந்தாங்கி, ஆலங்குடி, அரிமளம், ராயவரம் பகுதிகளை சேர்ந்த 8803 எக்டேர் நிலங்கள் உள்ளன. இவற்றில் முந்திரி, தைலமரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. முந்திரி அறுவடை, தைலமர அறுவடை போன்றவற்றிற்கு அறந்தாங்கியில் உள்ள அலுவலகத்தின் மூலமாக ஒப்பந்தம் வழங்கப்படுவது வழக்கம். இதில் ஒப்பந்தம் எடுப்பவர்களிடம் அலுவலக சூப்பிரண்டு வள்ளிக்கண்ணு லஞ்சம் கேட்டு பெற்று வருவதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி, மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் கனகமாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று காலை அறந்தாங்கியில் உள்ள தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்தனர். பின்னர் அவர்கள், அலுவலக கதவை சாத்திவிட்டு சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.50ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த பணியாளர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில், கணக்கில் வராத பணத்தை அலுவலகத்தில் வைத்திருந்த அலுவலக சூப்பிரண்டு வள்ளிக்கண்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் பரிந்துரை செய்தனர்.

Tags : office ,Regional Manager ,Forest Plantation Corporation , Aranthangi, Corruption Eradication Department, Regional Manager, Forest Plantation Association
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...