அரசு கஜானாவில் பணம் இல்லை.. கொரோனா செலவினங்களை காரணம் காட்டி எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% கட் குறைப்பு :மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!!

டெல்லி : எதிர்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 30% குறைக்க மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, நிதிப்பற்றாக்குறை உள்ளிட்டவற்றை சமாளிப்பதற்காக அடுத்த  ஓராண்டிற்கு எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% குறைக்க கடந்த ஏப்ரல் 6ம் தேதியன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் (சட்டத்திருத்தம்) 2020 என்ற பெயரிலான மசோதா மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியால் தாக்கல் செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. ராஜீவ், மாதம் ஒரு ரூபாய் பெற தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால் எம்பிக்கள் தொகுதி வளர்ச்சி நீதியான ரூ.8 000 கோடி திட்டத்தை ரத்து செய்ததை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டார். நாடாளுமன்ற வளாகம் மற்றும் மத்திய அரசு அலுவலக கட்டிடத் திட்டமான விஸ்டா திட்டத்திற்கு ரூ.20,000 கோடி செலவிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததை அவர் சுட்டிக் காட்டினார். திமுக எம்.பி.வில்சன் பேசுகையில், நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி திட்ட நிதியை முடக்கியத்திற்கு கண்டனம் தெரிவித்தார். ஏர் இந்தியா விமானங்களில் விவிஐபி-க்கள் பயணம் செய்ய மத்திய அரசு ரூ1,147 கோடி செலவு செய்ததை அவர் சுட்டிக் காட்டினார். 2014 முதல் விளம்பரங்களுக்கு மத்திய அரசு ரூ.5,200 கோடி செலவிட்டதை வில்சன் விமர்சித்தார். இதையடுத்து மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் இந்த மசோதா அமலுக்கு வரும். அரசிடம் போதிய அளவுக்கு நிதி ஆதாரம் இல்லை என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Related Stories: