‘இறைவனிடம் முறையிட வேண்டாம்’ என கடிதம்: திருடிய பொருட்களுக்கான பணத்தை கொடுத்த திருடன்

திருவனந்தபுரம்: கேரளாவில்  தான் திருடிய பொருட்களுக்கான பணத்தையும், மன்னிப்பு கேட்டும் எழுதிய கடிதத்தையும் கடை முன் போட்டு விட்டு திருடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள  மாநிலம், பாலக்காடு அலநல்லூர் அருகே குளப்பறம்பு கூத்துப்பறம்பில் பகுதியை  சேர்ந்தவர் உம்மர். பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். வழக்கம் போல்  நேற்று முன்தினம்  காலை கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் முன்பு ஒரு சிறிய  பார்சல் இருந்தது. உடனே அதை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் ₹5,000  மற்றும் ஒரு கடிதம் இருந்தது. கடிதத்தில், ‘அண்ணா (காக்கா) நானும்,  எனது நண்பனும், எங்கள் முட்டாள்தனத்தால் ஒருநாள் இரவு தங்கள் கடையில்  இருந்து சில பொருட்களை திருடி விட்டோம். இப்போது மனம் கேட்கவில்லை.

 தங்களை  நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க நினைக்கிறேன். ஆனால், பயம் காரணமாக இந்த  முறையை கையாண்டுள்ளேன். தயவுசெய்து பொறுத்தருள வேண்டும். என் திருட்டு  குறித்து இறைவனிடம் முறையிட வேண்டாம். வயதில் நான் தங்களின் தம்பியை போன்றவன். எனவே, என்னை மன்னியுங்கள்,’ என்று அந்த திருடன் கூறியுள்ளார்.  கடிதத்தை படித்தபிறகுதான் உம்மருக்கு நினைவு  வந்தது. கடந்த மார்ச் மாதத்தில் மர்ம நபர்கள் கடையின் மேற்கூரை ஓடுகளை  பிரித்து உள்ளே சென்று பேரீச்சம் பழம், தேன், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை  திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் யாரும்  சிக்கவில்லை. நாளடைவில் உம்மர் அந்த திருட்டு சம்பவத்தையே மறந்து விட்டார்.  இந்த நிலையில்தான், பார்சலில் அவருக்கு ₹5,000 பணத்தையும், மன்னிப்பு   கடிதத்தையும் திருடன் அனுப்பியுள்ளான்.

Related Stories: