×

ஊழல் வழக்குகளில் இருந்து தங்களை பாதுகாக்கவே விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு எடப்பாடி அரசு ஆதரவு: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு, ஊழல் வழக்குகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஆதரவளிக்கிறது பழனிசாமி அரசு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளம் எதைக் கடுமையாக எதிர்த்து-அதன் மத்திய அமைச்சராக இருந்த ஹர்ஸிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா வரை சென்றுள்ளாரோ; அதற்கு காரணமான, மத்திய பாஜ அரசின் சட்டங்களுக்கு-விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு; மக்களவையில், அந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானவை என அறிந்தே; அதிமுக மகிழ்ச்சியுடன் ஆதரவளித்துள்ளதற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக்கொள்ள வழிவகுப்பது அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம். வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டமும், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டமும் - தமிழக விவசாயிகள் மட்டுமின்றி - ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் வாழ்வில் சாவு மணி அடிக்கும் சட்டங்களாகும். ஆனால் இந்தச் சட்டங்களை, விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள் என்றும், தமிழகப் பொருளாதாரத்தை உயர்த்தும் சட்டங்கள் என்றும் கூறி அதிமுக ஆதரித்திருப்பது, விவசாயிகளுக்கு இதுவரை  செய்த பாதகமெல்லாம் போதாது என்று-மன்னிக்க முடியாத துரோகத்தையும் தற்போது செய்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள இந்த மூன்று சட்டங்கள்- கார்ப்பரேட்டுகளின் கையில் விவசாயிகளை அடமானம் வைக்கும் அராஜக சட்டங்கள். மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மை விவகாரத்திலும், மூக்கை நுழைக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான, சகித்துக் கொள்ள முடியாத சர்வாதிகாரம். ஆன்லைன் வர்த்தகம் செய்யும் விவசாயி, நிச்சயம் பான் நம்பர் பெற்றிருக்க வேண்டும் என்பது-வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள விவசாயத்தை வருமான வரி வரம்பிற்குள் கொண்டு வரும் சதி.
மாநிலத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நலன்களை நசுக்கி, குழிதோண்டிப் புதைத்து-கார்ப்பரேட்டுகளை கோபுரத்தில் அமர வைக்கும் தீய உள்நோக்கம் நிறைந்தது இந்தச் சட்டங்கள். விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல்; அவர்களை மேலும் கடனில் மூழ்க வைத்துத் திணறடிப்பதுமான இந்தச் சட்டங்களைப் புகழ்ந்து, ஆதரவு அளித்து, நவீன விவசாயி பழனிசாமி, இன்று தனக்குத் தானே இத்தனை நாளும் போட்டு ஏமாற்றிக் கொண்டிருந்த பகல் வேடம் கலைந்து, அம்பலமாகி நிற்கிறார்.

இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்காக அல்ல. கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு தூக்கி, பாதாபிஷேகம் செய்வதற்காக மட்டுமே. வருமானமின்றி ஏற்கனவே வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற விவசாயிகளின் வயிற்றில் அம்மிக்கல் கொண்டு அடித்து-அனைத்து விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக, ஏன், தமிழகத்தில் விவசாய நிலங்களை சகாரா பாலைவனம் ஆக்கும் பாஜ அரசின் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்து விவசாயிகள் முணுமுணுப்பே காட்டக் கூடாது என்று எச்சரிப்பதற்காக. பாஜ அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டுதான்-விவசாயிகளுக்கும்-தமிழக வேளாண் முன்னேற்றத்திற்கும் எதிரான இந்தச் சட்டங்களை  திமுக மக்களவையில் கடுமையாக எதிர்த்துள்ளது.

ஆனால் ஊழல்களில் புரையோடிப் போயிருக்கும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு-வழக்குகளில் இருந்து  தப்பித்து, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள - எஞ்சிய இன்னும் சில மாதங்கள் பா.ஜ.,வின் பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு, கஜானாவை மேலும் கொள்ளையடிக்க - மத்திய பாஜ அரசின் இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு மண்டியிட்டு முதல்வர் பழனிசாமி ஆதரவளித்து-விவசாயிகளின் நலன் குறித்து, கொஞ்சம் கூட இரக்கமின்றி நடந்து கொண்டிருக்கிறார். முதல்வர் பழனிசாமியை நான் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்; இனியொரு முறை மேடைகளில் நின்று நான் ஒரு விவசாயி என்று மட்டும் சொல்லாதீர்கள் ப்ளீஸ். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் எம்பி மறைவுக்கு இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  முன்னாள் மக்களவை உறுப்பினர் அ.கலாநிதி திடீரென்று மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனைப்பட்டேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவில் இருந்த போது மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984ம் ஆண்டுகளில் இருமுறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் - தொகுதி மக்களுக்காகப் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மருத்துவர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Tags : Edappadi ,MK Stalin , Government backs laws to break farmers' backbone to protect themselves from corruption cases: MK Stalin
× RELATED மத்திய அரசின் வேளாண் சட்டங்களை...