×

நாடு முழுவதும் கொரோனாவுக்கு 382 டாக்டர்கள் இறப்பு: தமிழகத்தில் 63 பேர் பலி: இந்திய மருத்துவர்கள் சங்கம் அதிர்ச்சி தகவல்

தமிழக அரசு சார்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் விவரங்களை தொடர்ந்து வெளியிடாமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது. மேலும், கொரோனாவுக்கு இறக்கும் மருத்துவ பணியாளர்களை கூட  மறைத்து அவர்கள் உடல் ரீதியான பிரச்னையால் உயிரிழந்ததாக அரசு கூறி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது வரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே முக்கிய காரணம் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் உட்பட மற்ற ஊழியர்களுக்கு உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால், இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளிப்படையாக எந்தவொரு அறிக்கையும் இதுவரை வெளியிடாமல் இருந்தது.

இதையடுத்து இந்திய மருத்துவர் சங்கத்தின் சார்பில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள அந்தெந்த கிளை அலுவலகங்கள் மூலம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தது. அதன்பேரில், இந்தியா முழுவதும் 382 டாக்டர்கள் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 63 டாக்டர்கள் உயிரிழந்து இருப்பதாக கூறியுள்ளது. 50 வயது நிறைவடைந்த டாக்டர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதை தவிர்த்து  பயிற்சி பெறும் டாக்டர்கள் ஒரு சிலரும் உயிரிழந்து இருப்பதாக கூறியுள்ளது.  உயிரிழந்த டாக்டர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் தமிழக அரசு சார்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் விவரங்களை தொடர்ந்து வெளியிடாமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது. மேலும், கொரோனாவுக்கு இறக்கும் மருத்துவ பணியாளர்களை கூட  மறைத்து அவர்கள் உடல் ரீதியான பிரச்னையால் உயிரிழந்ததாக அரசு கூறி வருகிறது.

 தமிழக அரசு சார்பில் 43 டாக்டர்கள் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள டாக்டர்கள் சங்கம் இதை மறுத்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா கூறியதாவது: தமிழக அரசு அறிவித்த எதையும் செயல்படுத்தவில்லை. இது, அனைவருக்கும் மனக்குறையாக உள்ளது. அரசு சார்பில் டாக்டர்கள் உயிரிழந்ததற்கு அறிக்கை கூட விடவில்லை. ஆறுதல் தரவில்லை. நாங்கள் எங்களது வருத்தத்தை அரசுக்கு கடிதம், இமெயில், நேரில் பார்க்கும் போதும் சொல்லி வருகிறோம்.

டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும்போது, எதிரில் இருக்கும் நோயாளிகளுக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியாது. அவர்கள் மூலம் டாக்டர்களுக்கு பரவுகிறது. வேறுவழியில் டாக்டர்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. டாக்டர்கள் ஆயிரக்கணக்கான நோயாளிகளை பார்க்கிறார்கள். அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த நேரத்தில் நோயாளிகளை கவனிக்கும் டாக்டர்களது சேவையை பார்த்து ராணுவ வீரர்களை போன்று டாக்டர்களுக்கும் உரிய மரியாதை தர வேண்டும் என்று சொல்கிறோம். அவர்களும் சரி என்றனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்தவில்லை.  உயிரிழந்த டாக்டர்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என்று அரசு கூறியதோடு சரி. இன்னும் நிவாரண உதவி வழங்கவில்லை.

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களின் விவரங்களை திரட்டி அரசுக்கு கொடுத்துள்ளோம். அரசு சார்பிலும் கொரோனா பாதிப்பால் தான் உயிரிழந்தார்களா என்று சரிபார்ப்பதாக கூறியுள்ளது. அவர்கள் சரிபார்ப்பது தவறில்லை. அதற்கு தான் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளது. அந்த துறைகள் மூலம் சரிபார்த்து உயிரிழந்த டாக்டர்களுக்கு அரசு அறிவித்ததை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : doctors ,country ,Corona ,Tamil Nadu ,Indian Medical Association , 382 doctors die in Corona across the country: 63 killed in Tamil Nadu: Indian Medical Association shocking information
× RELATED நுரையீரல் பாதிப்பை கண்டறிய முடியாத...