சொத்து பிரச்னையில் வாலிபர் காரில் கடத்திக் கொலை இன்ஸ்பெக்டர், அதிமுக நிர்வாகி உள்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு: சாத்தான்குளம் அருகே பரபரப்பு

சாத்தான்குளம்:  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வன் (35). இவருக்கு திருமணமாகி மனைவி ஜீவிதா மற்றும் ஒன்றரை மாத பெண் குழந்தை உள்ளது. இவர் அதே பகுதியில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். நாம் தமிழர் கட்சியில் ஊராட்சி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.   நேற்று முன்தினம் மதியம் செல்வன் சாத்தான்குளத்திலிருந்து சொக்கன்குடியிருப்புக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொழுந்தட்டு நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் திடீரென பைக் மீது மோதி செல்வனை கீழே தள்ளியது. பின்னர் காரில் இருந்து இறங்கிய கும்பல், செல்வனை தங்களது காரில் கடத்திச் சென்று உருட்டுக்கட்டையால் தாக்கி கடக்குளம்-திசையன்விளை சாலையோரமுள்ள காட்டுப் பகுதியில் போட்டுவிட்டு தப்பிச்சென்றது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால்  செல்லும் வழியிலேயே செல்வன் பரிதாபமாக இறந்தார்.

 தகவலறிந்ததும் சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமார் மற்றும் தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால், வழக்கை தட்டார்மடம் போலீசார் விசாரித்தால் நியாயம்  கிடைக்காது என்று செல்வனின் தாய் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தவே, திசையன்விளை போலீசுக்கு மாற்றப்பட்டது.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது:-  காந்திநகரிலிருந்து படுக்கப்பத்து செல்லும் வழியில் உள்ள இடத்தை செல்வனின் சித்தப்பா சிலுவைதாசன் மற்றும் துரைராஜ் ஆகியோரிடமிருந்து உசரத்துக்குடியிருப்பை சேர்ந்த அதிமுக மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் திருமணவேல் வாங்கியுள்ளார். அந்த இடத்தை வாங்கியபோது செல்வத்தின் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் செல்வன் குடும்பத்தினருக்கும், திருமணவேலுவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தகராறு இருந்து வந்தது.  இந்தநிலையில் செல்வன் குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்தை சிலர் நாட்டு வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தியதாக செல்வனின் சகோதரர்கள் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் பங்காருராஜன், பீட்டர்ராஜா ஆகியோர் மீதே வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் கடந்த ஜனவரி 19ம் தேதியன்று திருமணவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பங்காருராஜனை தாக்கியுள்ளனர். இதில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து பங்காருராஜன், ஹரிகிருஷ்ணன் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த நிலையில் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில் திருமணவேல் மற்றும் 5 பேர் கும்பல் செல்வனை கொலை செய்ததாக அவரது தாய் எலிசபெத் திசையன்விளை போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து, தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது இ.பி.கோ 302(கொலை), 107, 336, 364 ஆகிய பிரிவுகளில் திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

காவல் நிலையம் முற்றுகை

தட்டார்மடம் இன்ஸ்பெக்டரை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி செல்வனின் உறவினர்கள், நண்பர்கள் நேற்று காலை திசையன்விளை காவல்நிலையம் முன்பு திரண்டனர். இதில் செல்வனின் மனைவி ஜீவிதா தனது 3 மாத குழந்தையுடன் பங்கேற்றார். மாலை 6.30 மணியளவில் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், வந்தார். அவர், செல்வன் கொலை தொடர்பாக சின்னத்துரை, முத்துராமலிங்கம், ராமன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். எனினும் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன்,அதிமுக பிரமுகர் திருமணவேலை கைது செய்யும் வரை தொடர் மறியலில் ஈடுபடுவோம் என்றனர். இரவு வரை மறியல் தொடர்ந்தது.

Related Stories: