×

குட்கா விவகார உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்றது தொடர்பாக உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை, வேறு ஒரு நீதிபதி விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் பாபு பரிந்துரை செய்துள்ளார். தமிழக அரசால் கடந்த 2013ம் ஆண்டு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தடைசெய்யப்பட்டன. ஆனால் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.,க்கள் பேரவைக்குள் கடந்த 2017ல் குட்கா பொட்டலங்களை கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக, பேரவை தலைவர் அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில், சட்டப்பேரவை உரிமைக்குழு, உரிமை மீறல் நோட்டீஸை அனுப்பியது. அதை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.,க்கள் கடந்த 2017 செப்டம்பர் 7ல் வழக்கு தொடர்ந்தனர். அதில், ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் மரணமடைந்த நிலையில், மற்றவர்கள் மீதான வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு விசாரித்து, கடந்த ஆகஸ்ட் 25ல் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், 2017ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படை தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், பேரவை உரிமைக்குழு விருப்பப்பட்டால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்றும், திமுக எம்.எல்.ஏ.,க்கள் அவர்களின் கருத்துகளை அக்குழுவிடம் முன்வைக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.
 இந்த விவகாரத்தில் உரிமைக் குழு செப்டம்பர் 7ம் தேதி பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடியது. அதன் முடிவின்படி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்டப்பேரவை தொடங்கும் நாளான 14ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டது. புதிய நோட்டீஸை எதிர்த்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தங்களை பங்கேற்க விடாமல் தடுப்பதற்காகவும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாக கையாண்ட விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்புவதை தடுக்கும் வகையிலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுவை விசாரிக்க கோரி திமுக சார்பில் நீதிபதி ரவிச்சந்திரன் பாபு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அவர், ஏற்கனவே இதே வழக்கு கடந்த 2017ம் ஆண்டு என்னிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தலைமை அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் என்னிடம் விசாரணைக்கு வந்துள்ளதால் இதனை விசாரிக்கவில்லை என்று கூறி, வேறு ஒரு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்தார். அதன்படி இந்த வழக்கு வேறு ஒரு நீதிபதிக்கு மாற்றி பட்டியலிடப்பட்டு விரைவில் விசாரணை நடைபெறும்.



Tags : judge ,DMK ,ICC , Other judge continued the case against the DMK stocking, notice Rights Affairs recommends: HC orders
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...