மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை நீக்கியது ஐகோர்ட்

சென்னை:  மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்க கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 3ம் தேதிக்குள்  முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளதால், அந்த காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தும்படியும் உத்தரவிட்டார்.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, கால நீட்டிப்பு கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவு நீக்கப்படுகிறது என்றார்.  அப்போது, மனுதாரர்கள் தரப்பில், நீட் தேர்வில் தங்களைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிக்க வழக்கை செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: