2 மாதமாக சம்பள பாக்கி மாநகராட்சி அலுவலகத்தை களப்பணியாளர்கள் முற்றுகை

தண்டையார்பேட்டை:சென்னை மாநகராட்சி முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளில் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு மண்டலங்களிலும் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது, காய்ச்சல் உள்ளவர்களின் விவரங்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாத சம்பளம் அடிப்படையில் இவர்களை மாநகராட்சி நிர்வாகம் பணியில் அமர்த்தி உள்ளது. ஆனால், பல மண்டலங்களில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை, என கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட களப்பணியாளர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தண்டையார்பேட்டை மண்டலத்தில் பணிபுரியும் களப்பணியாளர்கள் 500 பேருக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை, என கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது. மேலும் சம்பளம் கேட்டு தொந்தரவு செய்த 300 பேரை பணிக்கு வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த களப்பணியாளர்கள் நேற்று தண்டையார்பேட்டை  மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், தொடர்ந்து பணி வழங்க வேண்டும், என கோஷமிட்டனர்.

Related Stories: