வேளாண் மசோதாக்களை கண்டித்து 25ம் தேதி பாரத் பந்த்: விவசாய சங்கம் அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். வரும் 25ம் தேதி ‘பாரத் பந்த்’ நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 2 மசோதாக்கள் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை என நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன. பஞ்சாப்பில் உள்ள 10 விவசாய சங்கங்கள் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளன. வரும் 25ம் தேதி பஞ்சாப் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

அகில இந்திய கிசான் சங்கார்ஸ் ஒருங்கிணைப்பு குழு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மசோதாக்களால், விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும். தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து அகற்றுவதாலும், தனியார் மண்டிகள் அமைக்கப்படுவதாலும் விவசாயிகளின் விலை பாதுகாப்பு பறிபோகும். எனவே, இந்த மசோதாவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

கூட்டணி வலுவாக உள்ளது

விவசாய மசோதா காரணமாக அரியானாவில் ஆட்சி செய்யும் பாஜ-ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.   இந்த மசோதாக்களுக்கு ஜேேஜபி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இக்கட்சி சார்பில் துணை முதல்வராக உள்ள  துஷ்யந்த் சவுதாலா (ஜேஜேபி), முதல்வர் மனோகர் லால் கட்டாரை நேற்று சந்தித்து பேசினார். பின்னர், துஷ்யந்த்தின் சகோதரரும், ஜேஜேபி கட்சி தலைவருமான திக்விஜய் சிங் சவுதாலா கூறுகையி்ல், ‘‘எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது,’’ என்றார்.

Related Stories: