×

மாவட்டங்கள் பிரிப்பு, வழிகாட்டு குழு அமைப்பதில் கருத்து வேறுபாடு: அதிமுக தலைமை அலுவலகத்தில் பஞ்சாயத்து: இபிஎஸ்-ஓபிஎஸ் நேரடி மோதல்

சென்னை: அதிமுக கட்சிக்குள் மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிப்பது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கிடையே கருத்து மோதல் எழுந்தது. இதனால் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நேரடியாக மோதியதால் நிர்வாகிகள் திகைத்து நின்றனர். அதேநேரத்தில் அவர்களை வரவேற்க தொண்டர்கள் தனித்தனியாக திரண்டு நின்று கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் 7 மாதங்களே உள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வருகிற சட்டமன்ற தேர்தலில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவை இப்போதே மிரட்ட தொடங்கியுள்ளன. பாஜ தலைமையில்தான் கூட்டணி என்றும், தேமுதிக தனித்து போட்டியிடவே விரும்புகிறது என்றும், பாமக ஆட்சி அமைக்கும் என்றும் கூறி வருகின்றனர். இது அதிமுக தலைமையை கோபம் அடைய செய்துள்ளது.

அதேநேரம், அதிமுகவிலும் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் யார் முதல்வராக வர வேண்டும், தேர்தல் பிரசாரத்தின்போது யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற உள்கட்சி பிரச்னை தலைதூக்கியுள்ளது. இந்த பிரச்னை கடந்த மாதம் பூதாகரமாக வெடித்தது. அமைச்சர்கள் பலரும் முதல்வர் எடப்பாடிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தனர். இதனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார். மேலும், அவரது சொந்த மாவட்டமான தேனியில், `ஜெயலலிதாவின் ஆசி பெற்ற முதல்வர் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்’’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டது. இது அதிமுக கட்சிக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், மூத்த அமைச்சர்கள்
முதல்வர், துணை முதல்வரிடம் பேசி சமாதானம் செய்தனர். இதையடுத்து, அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது. அப்படி பேசினால் கட்சி சார்பில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். ஆனால், அப்போது கூட இருவரும் சந்தித்து பேசவில்லை. .

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை  அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அவசர உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் மட்டும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் தனியாக நடந்தது. இந்த இரு கூட்டங்களும் மாலை 6.40 மணி வரை நடந்தது. இந்த கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாவது: முதலில் 4 பேர் மட்டும் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலையொட்டி கூடுதல் மாவட்டங்களை பிரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்படி பிரிக்கும்போது அதிருப்தியாளர்களுக்கு பதவி வழங்க முடியும். அதன்படி 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் மாவட்டங்களை பிரிக்க மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை மீறி கட்சி தலைமையால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர். தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கூட நேற்று வரவில்லை. வீட்டில் இருந்து கொண்டு மாவட்ட பிரிப்பு குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். அதேபோல அமைச்சர்களின் கைகளில் உள்ள விழுப்புரம், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களை பிரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த முடிவுகள் ரகசியமாக வைக்கப்பட்டது. பின்னர்அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம், அவர்களுக்கு எவ்வளவு சீட் வழங்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுகவுக்கு ஆதரவு அளித்த கட்சிகள் தற்போதும் எங்கள் கூட்டணியில் உள்ளன. அதேநேரம், அவர்கள் எங்களை மிரட்டி சீட் பெறலாம் என்று நினைக்கக்கூடாது. அவர்களின் வெற்றிவாய்ப்புக்கு ஏற்ப சீட் ஒதுக்கப்படும். ஆனாலும், கூட்டணி மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் சீட் குறித்து அதிமுக பொதுக்குழுவில் பேசி இறுதி செய்யப்படும். அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், திடீரென்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2017ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை அமைக்க வேண்டும் என்றார். அந்தக் குழுவில் தன்னுடைய ஆதரவாளர்கள் 6 பேருக்கு இடம் வேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருந்தார். இதனால் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக ஓ.பன்னீர்செல்வம் இந்த பிரச்னையை கையில் எடுத்தார்.

ஆனால், முதல்வர் பழனிசாமி அருகில் இருந்தபடி அது தற்போது தேவையில்லை. இப்போது உள்ள குழுவே போதுமானது. வழிகாட்டு குழு வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். ஓ.பன்னீர்செல்வம் கூறியதற்கு பதிலடியாக எடப்பாடி கூறியதும் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. பல அமைச்சர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தர்மசங்கடத்துடன் அமர்ந்திருந்தனர். பின்னர் அவர்களுக்குள் ஒருமித்த முடிவுகள் ஏற்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

காற்றில் பறந்தது சமூகஇடைவெளி
அதிமுக அவசர உயர்நிலை கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, தலைவர்களை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். ஆனால், சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை. ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு நின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் மிரட்டல்
தமிழகத்தில் இன்னும் 7 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்று கட்சி தலைமைதான் முடிவு செய்யும். ஆனால், தற்போதுள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் 10 தொகுதி இருந்தால் எங்களுக்கு 5 சீட் தந்து விடுங்கள். அந்த தொகுதிக்கு நாங்களே வேட்பாளரை அறிவிப்போம். மீதம் உள்ள 5 சீட் கட்சி தலைமை எடுத்துக் கொள்ளட்டும் என்று மிரட்டுவதாகவும் ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்தனர். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆதரவாளர்களால் சலசலப்பு
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் என்று அமைச்சர்கள் பலரும் கூறினர். இதனால், கோபம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று போஸ்டர் ஒட்டி பதிலடி கொடுத்தார். எனவே, உள்கட்சி மோதல் வெடித்தது. பின்னர் மூத்த அமைச்சர்கள் சமரசம் செய்யும் நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சென்னையில் அரங்கேறியது. இந்நிலையில் நேற்று, அதிமுக உயர்நிலை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திட்டமிட்டே அதிகளவில் கூடி இருந்தனர். எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகம் வந்ததும், `நிரந்தர முதல்வர் எடப்பாடி’ என்று தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். சில நிர்வாகிகள் அவரது காலில் விழுந்தும் வணங்கினர். அதேபோன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, `ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ், வருங்கால முதல்வர் ஓபிஎஸ்’ என்று தொண்டர்கள் கோஷம் போட்டனர். இதனால், அதிமுகவில் மீண்டும் முதல்வர் சர்ச்சை வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 28ல் செயற்குழு கூட்டம்
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28ம் தேதி திங்கட்கிழமை காலை 9.45 மணிக்கு சென்னை, ராயப்பேட்ைட, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். அனைவரும் அழைப்பிதழோடு தவறாமல் வந்து கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : districts ,steering committee ,Panchayat ,formation ,AIADMK ,headquarters , Disagreement over formation of districts, formation of steering committee: Panchayat at AIADMK headquarters: EPS-OPS direct clash
× RELATED கட்சிக்குள் கோஷ்டி மோதல்...