×

ஐபிஎல் தொடர் நாளை தொடக்கம் முதல் போட்டியில் சென்னை-மும்பை பலப்பரீட்சை

துபாய்: 13வது ஐபிஎல் டி.20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சிக்கு பின் தயாராக உள்ளது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் போட்டி நடக்கிறது. நாளை முதல் நவம்பர் 10ம்தேதி வரை மொத்தம் 53 நாட்கள் 60 போட்டிகள் நடக்கிறது. அபுதாபியில் நாளை நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.முதல் போட்டி நடக்கும் அபுதாபி மைதானத்தில் இதுவரை 44 சர்வதேச டி.20 போட்டிகள் நடந்துள்ளன. இங்கு முதலில் பேட் செய்த அணி 19 ஆட்டங்களிலும், 2வது பேட் செய்த அணிகள் 25 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு உதவிகரமாக இருக்கும். சுழற்பந்து வீச்சும் கைகொடுக்கும். பகலில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும். அதன் தாக்கம் இரவிலும் அதிகமாக காணப்படும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெறுகின்றன. சில வாரங்களுக்கு பின் 30 சதவீத ரசிகர்களை அரங்கத்திற்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், இதுவரை ஆடிய 10 ஐபிஎல் தொடர்களிலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 3 முறை கோப்பையையும் கைப்பற்றி உள்ளது. மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் 12 சீசனிலும் ஆடி 8 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் 5 முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து 4 முறை கோப்பையை கைப்பற்றி, அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது. கடந்த முறை பைனலில் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.சென்னை அணியில் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் இல்லாதது பின்னடைவு தான். இதனால் 3வது இடத்தில் முரளிவிஜய் ஆட வாய்ப்பு உள்ளது. ரவீந்திர ஜடேஜா, இபியுஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் என நான்கு அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதில், பியுஷ் சாவ்லா, ஜடேஜா, இம்ரான் தாஹிர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இவர்களுடன் தீபக் சாஹர் அல்லது ஷர்துல் தாக்குர், ஜோஷ் ஹேசல்வுட் வேகப்பந்துவீச்சில் இடம்பெறுவர். ஆல் ரவுண்டராக பிராவோவும் இடம்பெறுவார்.

மறுபுறம் மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்கில் வலுவாக உள்ளது. ரோகித்சர்மா, டிகாக், பொல்லார்ட், இசான் கிஷன், ஹர்த்திக்பாண்டியா, சூரியகுமார் யாதவ் என அதிரடி வீரர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சு தான் சற்று பலவீனமாக உள்ளது.  முதல் போட்டியில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது.ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெறும். இதில் கேப்டன்கள் அறிமுகம், முன்னணி நடிகர், நடிகைகள் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடக்க விழா நடைபெறவில்லை.

பாண்டியா பணிச்சுமையை குறைக்க முயற்சி
மும்பை இண்டியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே அளித்த பேட்டி: ஹர்திக் பாண்ட்யா காயத்திற்குப் பிறகு விளையாட வந்துள்ளார். வலைப் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டார். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக பாண்ட்யா சகோதரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். சிறந்த  பினிஷராக பாண்டியா திகழ்கிறார். நாங்கள் அவரை கடந்த காலங்களில் வெவ்வேறு சமயங்களில் பயன்படுத்தினோம். அவரின் பணிச்சுமையை குறைக்க முயற்சி செய்வோம். கிறிஸ் லின் சிறந்த வீரராக இருந்தாலும் ரோகித்சர்மாவுடன் டிகாக் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

ஆஸி, இங்கி. வீரர்கள் தயார்
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து டி.20 தொடர் நேற்று முன்தினம் முடிந்த நிலையில் ஐபிஎல்லில் ஆடும் இரு அணிகளைச் சேர்ந்த 21 வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வந்து சேர்ந்தனர். அவர்களின் தனிமைப்படுத்துதல் 36 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இன்று முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள். முதல் போட்டியில் இருந்து அவர்கள் களம் இறங்குவார்கள்.

Tags : Chennai ,multi-examination ,match ,Mumbai ,IPL , Chennai-Mumbai multi-examination in the first match of the IPL series starting tomorrow
× RELATED எங்கள் `இளம்’ விக்கெட் கீப்பரின்...