×

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

மதுரை: தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வெள்ளைக்கரை பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்த முனியசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு:தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் எங்களது கிராமம் அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு அரசு இப்பகுதியில் இலவச பட்டா வழங்கியது. எங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள 5 ஏக்கர் பரப்பிலான வெள்ளைக்கரை பகுதியை தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஆக்கிரமித்து வாழை உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்துள்ளார். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது எங்கள் பகுதிக்கு வெள்ளநீர் வராமலிருக்க தடுக்கும் பகுதியாக வெள்ளைக்கரை பகுதி இருந்தது. தற்போது முத்துக்குமார் அப்பகுதியை ஆக்கிரமித்து, ஆற்றங்கரையை சேதப்படுத்தியதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எங்கள் கிராமம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் எங்கள் பகுதி கடும் பாதிப்பை எதிர்கொண்டது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் முறையிட்டபோது கண்துடைப்பாக 50 சென்ட் நிலம் மட்டுமே அளவீடு செய்யப்பட்டது. ஆகவே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வெள்ளைக்கரை பகுதியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், வடக்கு ஆத்தூர் பகுதியில் வெள்ளநீர் புகாமல் இருக்க தடுப்பு சுவர் கட்டவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர், தூத்துக்குடி மாவட்ட பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர் 10 நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.



Tags : riverbank , Order to remove encroachment on Tamiraparani riverbank
× RELATED கோவையில் பவானி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!