திருமங்கலம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: அதிகாரிகள் வேடிக்கை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் உடைந்து வயல்வெளிகளில் தண்ணீர் ஒருவாரமாக பாய்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  திருமங்கலம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்கும் வகையில் காவிரியாற்றிலிருந்து குடிநீர் விநியோகம் திட்டம் கடந்த 8 ஆண்டுகளாக முன்பு துவக்கப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து திருமங்கலம் பகுதிக்கு காவிரிகூட்டுக்குடிநீர் குழாய்கள் மூலமாக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருமங்கலம் ஒன்றிய பகுதிகளில் அடிக்கடி காவிரிகூட்டுக்குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

கிராமபகுதிகளில் கால்நடைகளுக்காக குழாய்கள் உடைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் திருமங்கலம் அடுத்துள்ள நடுவகோட்டை கிராமத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒருவாரகாலமாக வயல்வெளிகளில் பாய்ந்து வீணாகி வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக நடுவக்கோட்டை, கிழவனேரி, அச்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் தகவல் கொடுத்தும் அதிகாரிகள் உடைப்பை சரி செய்யவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் காவிரிகுடிநீர் வீணாகி வயல்வெளிகளில் பாய்ந்தோடியபடியே உள்ளது. கூட்டுக்குடிநீர்த்திட்ட அதிகாரிகள் மற்றும் திருமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே கிராமமக்களின் கோரிக்கையாகும்.

Related Stories: