×

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் லட்சக்கணக்கில் முறைகேடு: அதிகாரிகள் விசாரணை தீவிரம்

வேலூர்: கணியம்பாடி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் லட்சக்கணக்கில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் போலியான பயனாளிகள், ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டத்தில் பயன்பெற்று இறந்தவர்கள் என்று பல்வேறு வகைகளில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி கடந்த ஆண்டு துவக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதைய பிரிக்கப்படாத வேலூர் மாவட்டத்திலும் பல ஒன்றியங்களில் இதுதொடர்பாக புகார்கள் எழுந்தது.இதையடுத்து இவ்விவகாரத்தில் ஊரக வளர்ச்சித்துறை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், 100 நாள் வேலைத்திட்டம், தனிநபர் கழிவறை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் தொடர்ந்து வருகிறது.

தற்போது வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் கீழ்அரசம்பட்டு ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பயனாளிகளை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு தனக்கு வேண்டப்பட்டவர்களின் விவசாய பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும், இப்பணிகளுக்காக சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்கான பணத்தை பெற்றுக் கொள்வதாக கிராம மக்கள் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதேபோல் வல்லத்தில் உள்ள தனது விவசாய நிலத்துக்கும் 100 நாள் வேலைத்திட்டப்பணியாளர்களை ஊராட்சி செயலாளர் பயன்படுத்திக் கொள்கிறாராம்.

மேலும் போலியான நபர்களை பட்டியலில் இணைத்தும் பெருமளவு முறைகேடு இந்த ஊராட்சியில் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு கடந்த 2 ஆண்டுகளில் ₹17 முதல் ₹20 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிராம மக்கள் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து 3 அதிகாரிகள் நேரில் சென்று கீழ்அரசம்பட்டில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, 100 நாள் வேலைத்திட்டத்தில் தவறுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஊராட்சி செயலாளர் மீது பொதுமக்கள் சரமாரியாக புகார்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஊராட்சி ஒன்றியம் மற்றும் பல ஊராட்சிகளில் பணியாற்றிய போது பல முறைகேடுகளில் தற்போதைய கீழ்அரசம்பட்டு ஊராட்சி செயலாளர் ஈடுபட்டுள்ளதும், இதற்காக துறைரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளானதும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்ட விவரங்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் கீழ்அரசம்பட்டு ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Millions ,Ganyambadi ,investigation ,Vellore district , Millions abused in 100-day program near Ganyambadi in Vellore district: Authorities intensify investigation
× RELATED இங்கிலாந்தில் ஒரே நேரத்தில்...