ஆன்லைனில் வங்கி கடன் வாங்கித் தருவதாக பல கோடி மோசடி.: குமாரப்பாளையத்தில் மோசடி கும்பலை கைது செய்தது போலீஸ்

நாமக்கல்: ஆன்லைனில் வங்கி கடன் வாங்கித் தருவதாக போலி கால்சென்டர் நடத்தி தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் சுருட்டிய கும்பலை நாமக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெருங்குடியை சேர்ந்த ஒருவரை மோசடி செய்து அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய வழக்கில் இந்த கும்பல் சிக்கி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட நபர் அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்த நிலையில், வழக்கை விசாரித்த போலீசார் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் இந்த மோசடி கும்பல் செயல்படுவதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து குமாரபாளையம் சென்ற சென்னை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த ஆன்லைன் மோசடி பற்றிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

குமாரபாளையத்தை சேர்ந்த குமரேசன், விவேக் ஆகியோர் இந்த மோசடிக்கு மூளையாக செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண்களை வைத்து போலியாக கால்சென்டரை தொடங்கி, போன் மூலமாகவே எளிதில் கடன் பெற விரும்பும் நபர்களை ஆசை வார்த்தைகளால் வீழ்த்தி உள்ளனர். கடன் பெற விரும்பும் நபர்களின் ஆவணங்களை  செல்போன் மூலமாகவே பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மோசடி கும்பலில் தலைவன் குமரேசன், விவேக் மற்றும் போலி கால்சென்டரில் பணிபுரிந்த 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை எடுத்துக்கொண்டு அதில் இருந்து ஒவ்வொரு எண்ணாக மாற்றி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்கள் செய்தது தெரியவந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் இந்த மோசடி கும்பல் வலையில் விழுந்து லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மோசடி கும்பல் குறித்த பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories: