×

பைக் டாக்சி தெரியுமா ?

நன்றி குங்குமம் தோழி

மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் பைக் டாக்ஸி சென்னையில் இயங்குகிறது. கால் டாக்ஸி தெரியும். அதென்ன பைக் டாக்ஸி  என்கிறீர்களா? மாற்றுத் திறனாளிகளான எங்களைப் பற்றியும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றியும் கொஞ்சமும் யோசிக்காத இந்த  சமூகத்தில், நாங்களே முயன்று எங்களுக்கான வருமானத்தை தேடிக்கொள்ளவும், எங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக்  கொள்ளவும் உருவானதே இந்த ‘மா உலா’. அதாவது ‘மாற்றுத் திறனாளிகள் உலா’. எங்களைப் பொறுத்தவரை, இது சுயமான ஜாலியான  உலா என்கிறார்கள் இந்த மாற்றுத் திறனாளர் நண்பர்கள்.

‘மா உலா பைக் டாக்ஸி’ உருவாக்கிய பாலாஜியிடம் பேசியபோது…"சென்னை மண்ணடிதான் என் ஏரியா. வீட்டில் நான் ஒரே பையன்.  பதினாறு பதினேழு வயது வரை எல்லோரையும் போல ஓடி ஆடி விளையாடிக் கொண்டுதான் இருந்தேன். +1 படிக்கும்போது திடீரென  ஒருநாள் என்னால் எழுந்து நடக்க முடியாமல் போனது. எனக்கு என்ன பிரச்சனை ஏன் நடக்க முடியலை என்பதை அறிய மருத்துவர்கள்  ரொம்பவே திணறினர். கடைசியாக மூளையில் இருந்து கால்களுக்கு சிக்னல் அனுப்பும் செல்கள் பாதிப்படைந்து இருக்கு எனச்  சொன்னார்கள். அந்தப் பாதிப்பு முதுகு தண்டுவடத்தில் இருந்தது. எனக்கு வந்த நோயினைக் கண்டு பிடிக்கவே மருத்துவச் செலவு  லட்சத்தை தொட்டிருந்தது. கல்லூரிக்குச் செல்லத் துவங்கும்போது எதையாவது பிடித்துக் கொண்டு கொஞ்சம் மெதுவாக நடந்து  கொண்டிருந்தேன். அந்த நிலையிலேயே கல்லூரியில் பி.பி.ஏ. முடித்தேன். நாளாக நாளாக எனக்கு நடப்பது சுத்தமாக முடியாமல் போனது.  ஒரு கட்டத்தில் வாக்கர் துணையோடு மட்டுமே நடந்தேன். ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்கும் நிலையில் பல வருடங்களை  கிட்டத்தட்ட 7 வருடங்களைக் கடத்தினேன்.

எனது பத்தொன்பதாவது வயதில் தொடங்கிய பிரச்சனை. இப்போது வயது 35.வேலைக்கென முயற்சித்தபோது எனக்கு யாரும் வேலை தர  முன் வரவில்லை. இயல்பாக இவனால் வேலை செய்ய முடி யுமா என யோசிக்கத் துவங்கினர். நேர்முகத் தேர்வுக்குச் செல்லுமிடத்தில்  எல்லாம் “கால் யூ பேக்” என்ற வார்த்தைகளைக் கேட்டு அலுப்புத் தட்டியது. ஒரு கட்டத்தில் அந்த வார்த்தையே பிடிக்காமல் போனது.  வேலைக்காகச் சொல்லப்பட்ட பொய்யான வாக்குறுதிகள் என் மனநிலையை ரொம்பவே பாதித்தது. மாற்றுத் திறனாளி என்றால்  அவர்களால் வேலை செய்ய முடியாது என்ற மனோநிலை எல்லா நிறுவனங்களிலும் அப்பட்டமாய் வெளிப்பட்டது. அவர்களும்  மனிதர்கள்தான். அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. வாய்ப்பு கொடுத்தால்தானே அவர்களால் இயங்க முடியும் என்ற சிந்தனையே நான்  சந்தித்த எந்த நிறுவனத்திற்கும் இல்லை. வாழ்க்கையை எப்படி நகர்த்தப் போகின்றேன் என்ற கவலை என்னை அரிக்கத் துவங்கியது.  இடையில் ஏற்பட்ட பிரச்சனை என்பதால் ஓடி ஆடித் திரிந்த நினைவுகள் என்னை வெகுவாய் கொன்றது.

சில மாற்றுத் திறனாளிகள் ஆதரவற்ற நிலையில், ரோட்டில் செல்பவர்களை எல்லாம் சார்ந்து வாழும் நிலையில் இருப்பார்கள்.  அவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு பயமும், கவலையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்தது. வேலை கிடைக்காத  நிலையில் என்ன செய்வது எனத் தெரியாமல் தற்கொலை எண்ணம் கூட ஏற்பட்டிருக்கிறது.  என் நண்பன் என் நிலை பார்த்து என்னை  யோகா, தியானம் என அழைத்துச் சென்றான். கொஞ்சம் கொஞ்சமாக என் மன நிலையில் மாற்றம் வந்தது. யோகா ஆசிரியர் ஒருவர்  என்னோடு என் மூன்று சக்கர வாகனத்தில் தினமும் பயணிப்பார். பெட்ரோலுக்கு ஆகும் செலவைக் கொடுப்பார். அவர்தான் ஒரு நாள் ‘நீ  ஏன் நடக்க முடியலைங்கிற காரணத்திற்காக ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்க. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போக்குவரத்துப்  பிரச்சனைகளால் ரயில்களில் கூட்டம் அலைமோதும். கூரைமேல் ஏறி எல்லாம் பயணிப்பார்கள். இதை தவிர்க்க அங்கு சில நேரம் ஒரே  பைக்கில் 4 பேர் கூட பயணிப்பார்கள். அவர்கள் நண்பர்கள் கிடையாது.

பயணித்துவிட்டு ஓட்டியவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். நீயும் அந்த மாதிரி செய்யலாமே. உன்னிடம்தான் வண்டி  இருக்கே’ எனக் கேட்டு என்னை சிந்திக்கத் தூண்டினார். தெரியாத நபர்களிடம் போய் கேட்டால் வருவார்களா எனத் துவக்கத்தில்  யோசித்தேன். இருந்தாலும் துணிந்து ஒரு சிலரை அணுகிக் கேட்டேன். அதுவும் அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. ஏதோ  பிச்சைக்காரனைப் பார்ப்பதுபோல் சிலர் ஏளனப் பார்வை பார்ப்பார்கள். தவறாகக் கேட்டது போன்ற குற்ற உணர்வை ஏற்படுத்திவிட்டுச்  சிலர் செல்வார்கள். திடீரென ஒருவரை அணுகி பைக் டாக்ஸில வாங்கன்னு கூப்பிட்டா எப்படி நம்பி வருவாங்க. இருந்தும், ஒரு  வயதானவர் முதன் முதலாக என் பேச்சை நம்பி பின்னால் ஏறினார். ராயபுரத்தில் இருந்து பாரிஸ் டெப்போ கொண்டுபோய் விட்டேன்.  முதல் வருமானமாய் எனக்கு 20 ரூபாய் கிடைத்தது. அதன் பிறகு பைக் டாக்ஸி என போர்டு வைத்து ரயில் நிலையத்தில் இருந்து  வெளியில் மக்கள் கூட்டம் வரும்போது எனது போர்டைக் காட்டுவேன். ஆனால் யாரும் வர மாட்டார்கள். ஒரு சிலர் யோசித்து ஏறுவார்கள்.  கொஞ்சம் நம்பிக்கை வந்தது. பேருந்து நிலையங்களுக்கும் செல்லத் துவங்கினேன்.

 10 பேரை அணுகினால் அதில் ஒருவர் வருவார். கொஞ்சம் நம்பிக்கை துளிர் விட்டது. 20 ரூபாய் 200 ரூபாயாக மாறியது. சரி இரவு  நேரம் இந்த வேலையைச் செய்யலாம் என யோசித்து, என் நேரத்தை மாற்றி ஓட்டத் துவங்கினேன். இரவு பஸ் வராத இடங்கள். பஸ்  போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு பயணிகள் ஏறத் துவங்கினர். கேட்ட பணத்தை கொடுத்தனர். 200 ரூபாய் வருமானம் 600 ஆக  மாறத் துவங்கியது. தயக்கம் போய் தெளிவு வந்தது. நம்பிக்கை பிறந்தது. தைரியமாக பயணிகளை அணுகத் தொடங்கினேன். கொஞ்சம்  கொஞ்சமாக மக்கள் என்னை கவனிக்கத் தொடங்கினர். இதை முகநூலில் புகைப்படத்தோடு பதிவிட்டேன். மாற்று திறனாளிகளுக்கான  சங்கம் வைத்திருக்கும் என் நண்பன் முகமது கடாஃபி வேலை வாய்ப்பின்றி தவிக்கும் மாற்றுத் திறனாளர்கள் இணைந்து செய்யலாம் என  முடிவு செய்து, இதை முறைப்படுத்தி, பதிவு செய்து, மாற்றுத் திறனாளர் உலா எனப் பெயரிட்டு சுருக்கமாக ‘மா உலா’ என மாற்றினார்.  ஒருவர் இருவராகி கொஞ்சநாளில் ஏழுபேராக இணைந்தோம். இப்போது இதில் 25 பேர் உறுப்பினராக உள்ளனர். ஒரு பெண் பைக் டாக்ஸி  ஓட்டுநரும் எங்களோடு இருக்கிறார். இன்னும் நிறைய பெண்கள் தேவைப்படுகிறார்கள்.

ஒரு நாளைக்கு குறைந்தது 1000 முதல் 1500 வரை சம்பாதிக்க முடியும். யாரிடமும் வேலைக்குப் போகாமல் கை கட்டி நிற்காமல்  தன்னம்பிக்கையோடு சம்பாதிக்கிறோம் என்கிற இந்த உணர்வு எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.  தொலைக்காட்சி சேனல்களில் என்  பேட்டிகள் வந்தன. எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் அதில் அவமானம், நிராகரிப்பு, கஷ்டம் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.  ஆனால் முயற்சியை மட்டும் விடக் கூடாது. முன்னேறனும்னா முதல் அடியை நாமதான் எடுத்து வைக்கணும்" என முடித்தார்.
பாலாஜியோடு இணைந்து இயங்கும் அவரின் நண்பரான முகமது கடாஃபியிடம் பைக் டாக்ஸி பற்றி பேசியபோது..."பாலாஜியின் பைக்  டாக்ஸி திட்டத்தை அவர் மூலம் அறிந்து, அதை பாலாஜியோடு சேர்ந்து விரிவுபடுத்த நினைத்தேன். நானும் பாலாஜியும் மட்டும் இதைச்  செய்தபோது துவக்கத்தில் நிறைய பிரச்சனைகளையும், ஒரு சில அவமானங்களையும் சந்தித்தோம். கொஞ்சம் போராடி பயணிகளின்  நம்பிக்கையினைப் பெற்ற பிறகு, பத்திரிகைகள் எங்களை ஊக்கப்படுத்தினர்.கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று இந்த நிலையை  அடைந்துள்ளோம். மாற்றுத் திறனாளி நண்பர்கள் 25 பேர் சென்னை முழுவதும்  எல்லாப் பகுதிகளிலும் மா உலா பைக் டாக்ஸியில்  உறுப்பினராய் இணைந்து ஓட்டுகிறார்கள். இன்னும் 60 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளார்கள். அதில் பெண்கள் 5 பேர் உள்ளனர்.

வண்டி ஓட்டத் தெரிந்து சொந்தமாக வண்டி இருந்தாலே போதும். எங்கள் மா உலா பைக் டாக்ஸியில் உறுப்பினரான பிறகு சீருடை,  உறுப்பினர் அட்டை, ஹெல்மெட் மற்றும் மா உலா பைக் டாக்ஸி என்கிற பெயர் பலகை எல்லாம் வழங்கிவிடுவோம். பெயர் பலகையில்  புக்கிங் எண் மற்றும் புகார் எண்கள் போடப்பட்டிருக்கும். பயணிகள் புக்கிங் எண்ணிற்கு போன் செய்தாலே பயணிப்பவர்களுக்குத்  தேவையான ஏரியாவில் உள்ள எங்கள் உறுப்பினரை நாங்களே தொடர்பு கொண்டு சொல்லிவிடுவோம். சில மாற்றுத் திறனாளர் நண்பர்கள்  இரவு சவாரி மட்டும் அதிகம் செல்வார்கள். குறைவான வருமானத்தில் வேலையில் இருக்கும் ஒரு சில மாற்றுத் திறனாளி நண்பர்களும்  இதில் உறுப்பினராக உள்ளனர். மாலை நேரம் மற்றும் விடுமுறை தினங்களில் மட்டும் அவர்கள் பைக் டாக்ஸி ஓட்டுகிறார்கள். ஆட்டோ  மாதிரியே, அந்தந்த ஏரியாவில் இருப்பவர்கள் அவர்களது வசிப்பிடங்களுக்கு அருகில் நிறுத்தம் வைத்து காத்திருப்பார்கள். 60 கிலோ  மீட்டரைத் தாண்டிக் கூட பயணிகளை இறக்கிவிடுகிறார்கள். பள்ளிக் குழந்தைகளில் துவங்கி, வேலைக்கு செல்வோர், முதியோர், வெளியூர்  பயணிகள் என எல்லோரும் இதனைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் ஊரில் இருந்து வரும்போதே முன்பதிவு செய்துவிடுகிறார்கள்.  இதற்கென ‘மா உலா’ புக்கிங் எண்கள் 7448442424 மற்றும் புகார் எண்களும் உள்ளது. மொபைல் செயலி ஒன்றையும் தயார் செய்து  கொண்டிருக்கிறோம்.

ரெகுலர் கஸ்டமர்கள் தவிர்த்து பேக்கேஜ் கவரேஜ்களும் இதில் உண்டு. பயணிப்பவரின் வேலை முடிந்து திரும்பும்வரை கூடவே இருந்து  அவரை அழைத்து வருவோம். அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைப் பொருத்து பணம் வாங்குகிறோம். எங்களுக்கென 250 ரெகுலர்  கஸ்டமர்களும் இருக்கிறார்கள். ஒரு பெண் சவுகார்பேட்டையில் 70 நபர்களுக்கு வீட்டில் வைத்தே உணவு தயாரிக்கிறார். சமையல்  முடித்ததும் எங்கள் வண்டியில் ஏற்றிச்சென்று தேவைப்படுவோருக்கு உணவினை கொடுத்து வருகிறோம். சில நேரங்களில் வாடிக்கையாளர்  தரும் பார்சல்களை குறிப்பிட்ட முகவரியில் சேர்க்கும் கொரியர் சர்வீஸ்களும் செய்கிறோம். வருமானம் தேவைப்படும் மாற்றுத் திறனாளிப்  பெண்களும் இணைத்து ஓட்டத் தயாராக இருந்தால், பெண் பயணிகள், பள்ளிக் குழந்தைகளை ஏற்பாடு செய்து தரவும் நாங்கள் தயாராக  உள்ளோம். தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்பதே எங்கள் திட்டம்’’ என  முடித்தார்.

மா உலாவில் இருக்கும் ஒரே பெண் ஓட்டுநரான செல்வியிடம் பேசிய போது, ‘‘பெண்கள் தைரியமாக கார், டிரெயின், ஃப்ளைட் என  எல்லாம் ஓட்டுகிறார்கள். ஆனால் மாற்றுத் திறனாளி ‘முதல் பைக் டாக்ஸி ஓட்டுநர் பெண்’ நான்தான்’’ என சிரித்துக்கொண்டே பேசத்  துவங்கினார் செல்வி."நான் சென்னை திருவொற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூர் பகுதியில் வசிக்கிறேன். 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன்.  சின்ன வயதில் பள்ளியில் படிக்கும்போது கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கவனிக்காமல் விடப்பட்டதில், எனது கால்  எலும்பு உள்ளுக்குள்ளே அரிக்கப்பட்டு இருந்தது.

பாதிப்படைந்த எலும்பை நீக்கி, செயற்கை எலும்பைப் பொருத்தினார்கள். அதன் விளைவாய்  என்னால் காலை நீட்ட மடக்க முடியாமல் இருந்தது. மேலும் ஒரு அறுவை சிகிச்சை என் காலில் செய்யப்பட்டு, தாங்கி தாங்கி நடந்த  நிலையிலேயே பத்தாவது முடித்தேன். ஒரு நாள் நான் சைக்கிளில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் எதிரே வந்தவர் வேகமாக  மோதியதில் நிகழ்ந்த விபத்தில், மீண்டும் காலில் அடிபட்டு நடக்கும் நிலையை இழந்தேன். அதன் பிறகு வாக்கர் உதவியோடு மட்டுமே  நடக்கும் நிலை ஏற்பட்டது. 50 சதவிகிதமாக இருந்த என் ஊனம் 80 சதவிகிதமாக மாறியது. எனக்கு எப்போதும் தன்னம்பிக்கை அதிகம்.  தொடர்ந்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து என்னைப் போன்றவர்களுக்கு உதவிகளைச் செய்யத்  துவங்கினேன்.

இந்நிலையில் மா உலா பாலாஜியின் அறிமுகம் கிடைத்தது. நானும் அதில் இணைந்தேன்.. கல்லூரி பெண்கள், பள்ளி மாணவிகளை பிக்  அப் மற்றும் டிராப் செய்கிறேன். என்னை மாதிரி எத்தனையோ பெண்கள் வண்டியை வைத்துக்கொண்டு சும்மா பொழுதைக் கழிக்கிறார்கள்.  தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள பெண்கள் இதில் இணைந்தால் நல்ல வருமானம் உறுதி. காலையும் மாலையும் மட்டும் 2 மணி  நேரம் ஓட்டினாலே போதும் குறைந்தது ஒருநாளைக்கு 150 ரூபாய் சம்பாதிக்கலாம்.நிறைய  இடங்களில் சாலைகளில் இருக்கும் ஸ்பீடு  பிரேக்கர்கள் சரியான முறையில் அமைக்கப்படவில்லை. எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் எங்களின் வண்டிகளை  வேகத்தடைகளில் ஏற்றி இறக்கும்போது வண்டி பாதிப்படைகிறது. பல நேரங்களில் பேலன்ஸ் இல்லாமல் சாய்கிறது. ஸ்பீடு பிரேக்கரை  அனைத்து வாகன ஓட்டிகளும் பயணிக்கும் நிலையில் அதிக மேடாக இல்லாம ல் கொஞ்சம் அகலமாக தட்டையாகப் போடலாம்.  சாலைகள் சமமானதாக இல்லை. சாலைகளில் திடீர் என வரும் பள்ளம் மேடு மழை நேரத்தில் தோன்றும் திடீர் குழிகள் இவையெல்லாம்  தொழில்ரீதியாக நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள். அவற்றையும் சமாளித்தே ஓட்டுகிறோம்" என்கிறார்.

- மகேஸ்வரி
படங்கள்: ஆ.வின்சென்ட்பால்


Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்