×

நான்கரை மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடிகள் மீண்டும் திறக்கப்பட்டது: மாஸ்க் அணியாதவர்கள் நுழைய தடை

சென்னை: கோயம்பேடு வணிக வளாகத்தில் இயங்கிய உணவு தானிய மொத்த விற்பனை அங்காடிகள் நான்கரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு வணிக வளாகத்தில் இயங்கி வந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் மூடப்பட்டது. காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன.இதனைத் தொடர்ந்து கோயம்பேட்டில் இயங்கி வந்த மொத்த காய்கறி அங்காடி தற்காலிகமாக திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்பட தொடங்கியது. மலர் அங்காடி வானகரம் பகுதியில் உள்ள கைலாசநாதர், வைகுண்ட பெருமாள் கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டையும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. பலக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகள் ஒவ்வொன்றாக திறக்கப்படும். முதற்கட்டமாக உணவுதானிய மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 18ம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 28ம் தேதியும், அதன்பிறகு படிப்படியாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகள் திறக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.

இதையடுத்து கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று முதல் உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி செயல்பட தொடங்கியது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து வியாபாரம் செய்ய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அங்காடிக்குள் நுழையும் வாடிக்கையாளர், விற்பனையாளர், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். முகக்கவசம் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று  எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags : food grain wholesalers ,Coimbatore , Coimbatore, Food Grain, Wholesale, Stores, Mask
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...