தெற்கு ரயில்வே டெக்னீசியன் நியமனம் 2,556ல் 1686 பேர் இந்தி மொழியில் எழுதியவர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: தெற்கு ரயில்வே டெக்னீசியன் நியமனங்களில் 2556 பேரில் 1686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார். ரயில்வே டெக்னீசியன் பணிக்கு 2018ம் ஆண்டு பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு பெற்றுள்ளவர்கள் பற்றிய விவரங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரியிருந்தார். அதற்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெக்னீசியன் பதவிக்கான தேர்வில் மொத்தம் 2,550 பேரில் இந்தியில் எழுதி தேர்வு பெற்றவர்கள் 1,686 பேர் என்றும் தமிழில் எழுதியவர்கள் 139 பேர் எனவும், மலையாளத்தில் எழுதியவர்கள் 221 பேர் என்றும் பதில் அளித்துள்ளார்.

ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் எழுதியவர்கள் 504 பேர் என்று கூறியுள்ளார். மேலும் ஜூனியர் இஞ்ஜினியர் நியமனத்தில் மொத்தம் 1,180 பேரில் இந்தியில் எழுதியவர்கள் 160 பேரும், மலையாளம் 315 பேர், தமிழ் 268 பேரும், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் 437 பேரும், அசிஸ்டெண்ட் லோகோ பைலட் நியமனத்தில் மொத்தம் 908 பேரில் இந்தியில் எழுதியவர்கள் 90 பேரும், மலையாளம் 176 பேர், தமிழ் 333 பேரும், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் 309 பேர் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: