மதுரை அருகே தூக்கில் பிணமாக தொங்கினார் போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் மர்ம மரணம்: பொதுமக்கள் 9 மணிநேரம் போராட்டம்; எஸ்ஐ உட்பட 4 போலீசார் மீது வழக்கு

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சாப்டூர் அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சதுரகிரி மகாலிங்கம் கோயில் மலையடிவார வாழைத்தோப்பு பகுதியில் வசிக்கின்றனர். இதில் கன்னியப்பன் மகன் ரமேஷ் (17) நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் படித்து வருகிறார். இவருடைய அண்ணன் இதயக்கனி (26) இதே ஊரைச்சேர்ந்த உறவினர் மகள் புனிதாவை காதலித்துள்ளார்.ஒரு மாதத்திற்கு முன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். புனிதாவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் சாப்டூர் போலீசார் ரமேஷ் மற்றும் குடும்பத்தினரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் ரமேஷை சாப்டூர் எஸ்ஐ ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் விசாரணைக்கென காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். திரும்ப அனுப்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை வாழைத்தோப்பு பெருமாள்குட்டம்பாறை உச்சியில் ஒரு மரத்தில் ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த பொதுமக்கள் திரண்டனர். உடலை மீட்க முயன்ற போலீசாரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். ‘விசாரணைக்கு அழைத்து சென்று ரமேஷை போலீசார் அடித்து கொலை செய்து விட்டனர். இதற்கு போலீசார்தான் காரணம்’ என்று கூறி முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ரமேஷின் அண்ணன் சந்தோஷ், கொடுத்த புகார்மனுவில், ‘‘எங்களை அடிக்கடி சாப்டூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து என்னையும், எனது அம்மாவையும் அடித்தனர். எனது தம்பி ரமேஷை விசாரணை என்ற பெயரில் போலீசார் அடித்து கொலை செய்து விட்டனர். இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், ரூ.25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்கவேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து எஸ்பி உத்தரவின்படி சாப்டூர் எஸ்ஐ ஜெயக்கண்ணன் உட்பட 4 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 3 மணிக்கு முடிந்தது. ரமேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: