×

முதலில் தடுத்து நிறுத்தியது கலைஞர் தலைமையிலான திமுக அரசு நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக; ஆதரித்தது அதிமுக: குற்றச்சாட்டுகளுக்கு மு.க.ஸ்டாலின் ஆதாரங்களுடன் பதிலடி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட குற்றச்சாட்டு -பதில் வடிவிலான அறிக்கை:  
குற்றச்சாட்டு: 2010 நீட் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? மத்தியில் அப்போது யார் ஆட்சி இருந்தது. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது. பதில்: முதலில் 2010-ல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவக் கழகம் அப்படியொரு விதிமுறைகளை வகுத்தது. இங்கு திமுக ஆட்சி நடைபெற்றதால்- முதல்வர் கலைஞர் உடனடியாக உயர் நீதிமன்றத்தை நாடி-வழக்குத் தொடுத்து “நீட் தேர்வைக் கொண்டு வரும் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளுக்கு” தடையுத்தரவு வாங்கினார். திமுக ஆட்சி இருந்த வரை 2011ம் ஆண்டுவரை நீட் தேர்வு செயல் வடிவத்திற்கும் வரவில்லை; தமிழகத்தில் நீட் தேர்வும் நடக்கவில்லை. முதல்வர் பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் திமுக ஆட்சியில் நீட் தேர்வு நடத்தப்பட்டது என்று ஒரு ஆதாரத்தை வெளியிடட்டும். ஆகவே திமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை.  

குற்றச்சாட்டு: யாருடைய ஆட்சியில் நீட் வந்தது? நீட் தேர்வு எப்பொழுது வந்தது?
பதில்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிருந்த போதே 18.7.2013-ல் “நீட் தேர்வை” ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அந்தத் தீர்ப்பு வருவதற்கான வழக்குகளில், திமுக ஆட்சியிலிருந்த போது தொடுத்த தமிழக அரசின் வழக்கு தான்  மிக முக்கியக் காரணம். 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தது; நீட் வரவில்லை; நீட் தேர்வும் நடக்கவில்லை.
 “நீட் தேர்வை ரத்து செய்து” அளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை-“விசாரணையே இல்லாமல்”- தீர்ப்பளித்த வழக்கில், “நீட் வேண்டும்” என்று மைனாரிட்டியாக மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வு 11.4.2016 அன்று திரும்பப் பெற்றது. இதன் விளைவாகவே  2016-ல் நீட் மீண்டும் வந்தது.
குற்றச்சாட்டு: 2010-ஆம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது உச்ச நீதிமன்றத்தில் வாதாடித் தீர்ப்பைப் பெற்றது அதிமுக ஆட்சி.
பதில்: 2010ம் ஆண்டு இந்தத் தீர்ப்பு வரவில்லை. நீட் தேர்வை ரத்து செய்த தீர்ப்பு 2013ல் வந்தது. அப்போது திமுக தொடுத்த வழக்கில் தான் அந்தத் தீர்ப்பு வெளிவந்ததே தவிர-அ.தி.மு.க. அரசு தொடுத்த வழக்கால் அல்ல என்பதே உண்மை. தீர்ப்பு வராத வருடத்தைச் சொல்லி, தன் தோல்வியை முதல்வர் பழனிசாமி திசை திருப்புகிறார்.
குற்றச்சாட்டு: நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டுவர யார் காரணம்? நீங்கள் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் கட்சிதான்.

பதில்: பச்சைப் பொய்! நீட் தேர்வு மீண்டும் வரக் காரணம், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி; மாநிலத்தில் பழனிசாமியின் அதிமுக ஆட்சி; 2017-18-ல் தான் முதன்முதலில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவர்கள் மீது திணிக்கப்பட்டது. அதிமுகவும்-பாஜகவும் தான் இந்த நீட் தேர்வுக்கு காரணம்; தொடர்ந்து நடக்கும் தற்கொலைகளுக்கும்  காரணம். கை நீட்டிப் பேசி, கைக்குள் இந்த உண்மைகளையெல்லாம் மறைத்திட முடியாது.
குற்றச்சாட்டு: நீட் தேர்வைக் கொண்டு வந்ததுதான் 13 பேர் மரணத்திற்கு காரணம். அதற்கு திமுக துணை போனதை யாரும் மறுக்க முடியாது. வரலாற்றுப் பிழையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
பதில்: வரலாற்றுப் பிழை மட்டுமல்ல; சொந்தப் பாதுகாப்புக்காக, துரோக சரித்திரத்தையே உருவாக்கியிருப்பது எடப்பாடி பழனிசாமி தான்.  உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு ரத்தான தீர்ப்பை மீண்டும் உச்ச நீதிமன்றமே “திரும்பப் பெற்ற” போது கனத்த அமைதி காத்தது அதிமுக ஆட்சி. பிறகு நீட் சட்டம் வந்த போது எதிர்த்து வாக்களிக்காமல்-ஒப்புக்கு வெளிநடப்பு செய்து ஆதரவளித்தது அதிமுக ஆட்சி. 2017-18ல் நீட் தேர்வை நடத்தியது எடப்பாடி பழனிசாமி ஆட்சி.

தமிழக சட்டமன்றத்தில் 2017ல் ஒருமனதாக-திமுக ஆதரவளித்து நிறைவேற்றப்பட்ட “நீட் தேர்வுக்கு விலக்கு” கோரும் இரு மசோதாக்களுக்குக் குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெறாமல்-குடியரசுத் தலைவர் நிராகரித்ததையும் மறைத்தது பழனிசாமி தான். அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதும் சட்டமன்றத்தில் மீண்டும் அந்த மசோதாக்களை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தால்-நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைத்திருக்கும்; அதையும் கெடுத்து-மாணவர்களையும் பெற்றோரையும் பழிவாங்கியது பழனிசாமி தான். தேர்தல் அறிக்கையில் “நீட்டை ரத்து செய்வோம்” என்று வெற்று அறிவிப்பு செய்து, தமிழக மக்களை ஏமாற்றியதும் அவரே தான்! சட்டமன்றத்தின் மசோதாக்களைக் கூட குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற” “வழி தெரியாத” பழனிசாமி, முதல்வராக நீடித்தால் போதும்; ஊழல் புகார்கள்-வழக்குகளிலிருந்து தப்பித்தால் போதும்; என்று மாணவர்களைப் பலிகடா ஆக்கியவர். ஆகவே இன்று வரை மாணவர்களை ஏமாற்றி-நீட் தேர்வை ரத்து செய்யாமல்-விலக்கும் பெறாமல், 13 மாணவர்கள் தற்கொலைக்கு அப்பட்டமான காரணம் முதல்வர் பழனிசாமியின் அதிமுக ஆட்சியே! இந்தத் துரோக வரலாற்றை - சரித்திரம் என்றும் மறக்காது; மறைக்கவும் செய்யாது! நினைவூட்டிக் கொண்டே இருக்கும்!

குற்றச்சாட்டு: நீட் தேர்வை எப்படி ரத்து செய்வார் மு.க.ஸ்டாலின்?
பதில்: அலுவல் மொழியாகத் தமிழும் ஆங்கிலமும் தொடரும் என்று தமிழ்நாட்டுக்கு விலக்கு அளித்ததைப் போலவும்; நுழைவுத் தேர்வை ரத்து செய்து அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்று-அந்தச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது போலவும்; முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது, திமுகவும் ஒருமனதாக, நிறைவேற்றி அனுப்பிய “ஜல்லிக்கட்டு மசோதாவிற்கு” குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது போலவும்; திமுக ஆட்சிக்கு வந்தவுடன்-சட்ட வழிகளைப் பயன்படுத்தி - சட்டமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி-தேவைப்படுங்கால் நீதிமன்றங்களின் ஆதரவைப் பெற்று; நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். “திமுக எப்போதும் சொன்னதைச் செய்யும்; செய்வதைத்தான் சொல்லும்” என்பதை  பழனிசாமிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன்-சட்ட வழிகளைப் பயன்படுத்தி - சட்டமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி-தேவைப்படுங்கால் நீதிமன்றங்களின் ஆதரவைப் பெற்று; நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து
திமுக தலைவ்ர் மு.க.ஸ்டாலின், முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளும் பெற்று, நாட்டிற்கான உங்களது பணி தொடர வாழ்த்துகிறேன்.

Tags : government ,NEET ,DMK ,BJP ,MK Stalin ,AIADMK , The first to block was the artiste-led DMK government that brought in the NEET selection BJP; Supported by AIADMK: Retaliation for allegations with MK Stalin's evidence
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு