சென்னையில் மோடி பிறந்தநாள் கோலாகலம் சட்டப்பேரவைக்கு பாஜ எம்எல்ஏக்களை அனுப்புவோம்: தமிழக தலைவர் முருகன் பேட்டி

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாளையொட்டி, தமிழக பாஜ சார்பில் நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் 70 அடி கேக்கை எல்.முருகன் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பிறந்தநாளை முன்னிட்டு பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் ஏற்பாட்டில் 70 பெண்களுக்கு தையல் மிஷின், 70 மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, 70 கல்லூரி மாணவர்களுக்கு மொபைல் டேப், 70 பேருக்கு இலவச இதயம் மற்றும் கண்சிகிச்சை, 700 மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட ரூ.70  லட்சம் மதிப்பிலான பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் பாஜ பார்வையாளர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம் சார்பில் சிறப்பு  வழிபாடு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பாஜ மாநில செயலாளர் டால்பின் பா.ஸ்ரீதரன் ஏற்பாட்டில் மாணவர்கள், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இளைஞர் அணி மாநில பொருளாளர் ஜி.கே.எஸ். என்ற சுரேஷ் கர்ணா ஏற்பாட்டில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. எல்.முருகன் அளித்த பேட்டியில், ‘‘தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக 1 கோடி கையெழுத்து வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பும் பணி பாஜ சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும். எங்கள் எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்புவோம்’’ என்றார்.

Related Stories: