கிசான் திட்ட மோசடியை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பொன்முடி பேட்டி

சென்னை: தமிழகத்தில் நடந்த கிசான் திட்ட மோசடியை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என்று பொன்முடி கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கூட்டம் முடிந்த பின்பு கலைவாணர் அரங்க வளாகத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் கிசான் திட்டத்துக்கான கவன ஈர்ப்பு தீர்மானம் அவையில் கொண்டுவரப்பட்டது. இதை ஆய்வு செய்ய மாநில அரசின் அதிகாரிகள் தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது அனைத்தும் மத்திய அரசே பொறுப்பு என்று சொல்ல முடியாது. இந்த ஊழல் என்பது நிலமே இல்லாதவர்கள், விவசாயியே இல்லாதவர்களின் பெயரை எழுதி பணம் கொடுத்தன் விளைவாக ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.110 கோடி. இதை அமைச்சர் பேசும் போதே ஒத்துக் கொண்டார்.

முதல்வரும் 5 லட்சம் பேர் என்று சொல்லிவிட்டார். இதை தான் கேட்டோம். மத்திய அரசை மட்டும் பொறுப்பு என்று சொல்லக்கூடாது என்றோம். சிபிசிஐடி மூலம் கைது செய்திருப்பதாக அமைச்சர் சொன்னார். அந்த கணக்கெல்லாம் பார்த்தால் ஒப்பந்த ஊழியர்கள், புரோக்கர்கள் தான் உள்ளனர். 40 பேரை கைது செய்திருப்பதாக சொல்கிறார்கள். இதில் 35 பேர் தொடர்பில்லாத ஆட்கள். எனவே ஆட்சியில் இருப்பவர்களுக்கும் இந்த ஊழலில் பங்கு உண்டு என்று நான் கருதுகிறேன். அதனால் சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் சொல்லியிருக்கிறார். எனவே முதல்வர் சிபிஐ மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: