நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் மத்திய அரசுக்கு வரி வசூல் ரூ.2.53 லட்சம் கோடி: கடந்த ஆண்டை விட 22.5% சரிவு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரை, மத்திய அரசுக்கு ரூ.2,53,532.3 கோடி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 22.5 சதவீதம் குறைவு. நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டுக்கான வரி வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்களில் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் கடந்த 15ம் தேதி வரை மத்திய அரசுக்கு ரூ.2,53,532.3 கோடி வசூல் ஆகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் வரி வசூல் ரூ.3,27,320.2 கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் வசூல் 22.5 சதவீதம் சரிந்துள்ளது. முன்கூட்டிய வரி வசூலும் இதில் அடங்கும் எனவும், இதுகுறித்த தனித்தனியான விவரங்கள், இந்த மாத இறுதிக்கு பின்னர் வெளியிடப்படும் எனவும் மும்பையில் உள்ள வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடப்பு நிதியாண்டில் கடந்த ஜூன் மாதத்துடன் காலாண்டில் வரி வசூல் முந்தைய ஆண்டை விட 31 சதவீதம் குறைந்தது. கொரோனா பரவலால் முன்கூட்டிய வரி வசூல் 76 சதவீதம் குறைந்ததே மொத்த வரி வசூல் சரிவுக்கு காரணம். நடப்பு நிதியாண்டில் இதுவரை வசூலான தொகையில், தனி நபர் வரி வசூல் ரூ.1,47,004.6 கோடியாக உள்ளது. வரி வசூலில் பெங்களூரு மண்டலத்தில் மட்டுமே முந்தைய ஆண்டை விட வசூல் 9.9 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் உள்ள பகுதிகளில் வரி வசூல் தொடர்ந்து பாதிப்பை சந்திக்கும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: