உலகப் போர்களுக்கு பின் மிகப்பெரிய சோகம்; முழு உலகமும் இந்தியாவை நோக்கி உள்ளது: தடுப்பூசி தயாரிப்பு குறித்து பில்கேட்ஸ் நம்பிக்கை

நியூயார்க்: உலகப் போர்களுக்கு பின் இன்று உலகமே மிகப்பெரிய சோகத்தில் உள்ளது. தடுப்பூசி கண்டறிவதில் முழு உலகமும் இந்தியாவை நோக்கி உள்ளது என்று பில்கேட்ஸ் நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி கண்டறிவதற்காக ​​பல நாடுகளின் அறிவியல் மற்றும் மருந்து நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சில தடுப்பூசிகள் பரிசோதனையின் மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி கண்டறிவதில், அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் அறக்கட்டளை, இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், பில்கேட்ஸ் அறக்கட்டளை தலைவரான பில்கேட்ஸ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கோவிட் -19 தடுப்பூசி தயாரித்து வழங்குவதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு. உலகின் அனைத்து வளரும் நாடுகளும், இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசியால் பயனடையப் போகின்றன. பில்கேட்ஸ் அறக்கட்டளை, தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், தடுப்பூசியை உருவாக்கவும் பல்வேறு உதவிகளை ெசய்து வருகிறது. உலகப் போர்களுக்கு பிறகு, உலகம் மிகப்பெரிய சோகத்தை எதிர்கொண்டுள்ளது. தடுப்பூசி தயாரிப்பில், முழு உலகமும் இந்தியாவை நோக்கி உள்ளது. இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டவுடன்,

அதன் அளவை உற்பத்தி செய்யும் பொறுப்பு இந்தியா மீது வரும். உலகிற்கு தடுப்பூசி தயாரித்து வழங்கும் முக்கிய பணியை இந்தியா மேற்கொள்ளும். தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறையுடன், அதற்கான முழு தயாரிப்புக்கான பூர்வாங்க பணிகள் 2021ல் தொடங்கும். தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியாவுக்கு பெரிய பங்கு உள்ளது. ஆனால் அதை வளரும் நாடுகளுக்கு கொண்டு செல்வது மிகவும் சவாலானது. அதனால்தான் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக முறையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இந்த தடுப்பூசியை பணக்கார நாடுகளுக்கு மற்றுமின்றி, மற்ற நாடுகளுக்கு வழங்கவும், மக்களின் உயிரைக் காப்பாற்றவும் எங்களுக்கு உயரிய பொறுப்பு உள்ளது’ என்றார்.

தடுப்பூசி சோதனைக்கு அனுமதி

கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி சோதனைகள் பல நாடுகளில் நிறுத்தப்பட்டன. இங்கிலாந்தின் தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியத்தின் (டி.எஸ்.எம்.பி) பரிந்துரைகளின் அடிப்படையில் மீண்டும் சோதனைகள் ெதாடங்கப்பட்டது. அதையடுத்து, இந்தியாவில் மீண்டும் தொடங்க சோதனைகளை தொடங்க, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்தது. அதையடுத்து, கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளை மீண்டும் தொடங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனத்திற்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டிசிஜிஐ) அனுமதித்துள்ளது.

பில்கேட்ஸ் தந்தை மறைவு

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்சின் தந்தையும், வழக்கறிஞருமான வில்லியம் எச்.கேட்ஸ் - II (94) இன்று காலமானார். ‘அல்சைமர்’ நோயால் பாதிக்கப்பட்ட இவர், வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள தனது கடற்கரை வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கும் போது இறந்தார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை, உலகளவில் பிரபலப்படுத்தினார். உலக மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க அறக்கட்டளை சார்பில் பல திட்டங்களை கொண்டுவர பாடுபட்டார். இந்நிலையில், தனது தந்தையின் மறைவு குறித்து பில்கேட்ஸ் வெளியிட்ட டுவிட்டர் பதவில், ‘என் அப்பாவின் ஞானம், தாராள மனப்பான்மை, இரக்கம் மற்றும் பணிவு ஆகியவை உலகெங்கிலும் உள்ள மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின’ என்று தெரிவித்து, அவரது புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

Related Stories: