×

தோகைமலை நெய்தலூர் காலனியில் மயானத்திற்கு செல்ல சாலை அமைக்கப்படுமா?

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர்காலனி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்தவர்களுக்காக நெய்தலூர்- நெய்தலூர் காலனி மெயின் ரோட்டில் உள்ள 4 குழாய் பாலம் வடிகாலை ஒட்டி, சுமார் 260 மீட்டர் தூரத்தில் எரிமேடையுடன் கூடிய மயானம் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 70 ஆண்டுகளாக சமத்துவ மயானமாக உள்ள இம்மயானத்திற்கு இன்னும் சாலை வசதி அமைக்கவில்லை என்பது தான் இப்பகுதி பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலையின் ஒருபுறம் 4 குழாய் பாலம் வடிகால் செல்கிறது. மற்றொரு புறம் விவசாய நிலம் அமைந்து உள்ளது.

மேலும் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி வருவதால் மயானத்திற்கு செல்லும் சாலை சுருங்கிவிட்டது. மேலும் மண்பாதையாக உள்ளதால் மழை காலங்களில் சாலையில் சகதி ஆகி விடுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதில் மிகுந்த இடையூறாக உள்ளதாக இப்பகுதியினர் வேதனை தெரிவித்து உள்ளனர். அப்பகுதி மக்கள் சாலையை அகலப்படுத்தி தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஆகவே நெய்தலூர்- நெய்தலூர் காலனி மெயின் ரோட்டில் உள்ள 4 குழாய் பாலம் வடிகாலை ஒட்டி அனைத்து சமுதாய மக்களின் சமத்துவ மயானமாக உள்ள மயானத்திற்கு செல்லும் மண் சாலையை அகலப்படுத்தி தார்ச்சாலையாக அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : road ,cemetery , Tokaimalai, Cemetery, Road
× RELATED சேறும், சகதியுமான மஞ்சனக்கொரை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை