×

அரசின் தடையில்லா சான்று இல்லாமல் விவசாய படிப்புகளை துவங்கும் பல்கலைக்கழகங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன? : உயர்நீதிமன்றம்

சென்னை : அரசின் தடையில்லா சான்று இல்லாமல் விவசாய படிப்புகளை துவங்கும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து செப்டம்பர் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விவசாய கல்லூரிகள் ஆரம்பிக்கவேண்டுமானால், 110 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்... ஆய்வக வசதிகள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்கள் வகுத்துள்ளன.

ஆனால், தமிழகத்தில் உள்ள ஒன்பது நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்த விதிமுறைகளையும், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளையும் பின்பற்றாமல்  விவசாய படிப்புகளை துவங்கியுள்ளதாக கூறி, சுயநிதி வேளாண் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில், விவசாய படிப்புகள் துவங்க, தமிழக அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும் என கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், அதுவரை மாணவர் சேர்க்கை நடத்த கூடாது எனவும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க கோரி அரசுக்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செப்டம்பர் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்  செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags : universities ,government ,High Court , Certification, Agricultural Studies, Universities, Activity, High Court
× RELATED தடையில்லா சான்று இல்லாமல் துவங்கும்...